வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதிகளை தே.மு.தி.க.வுக்கு தள்ளிவிடும் அ.தி.மு.க..

Must read

ரண்டு படகுகளில் பயணம் செய்ய முயன்று  நடுக்கடலில் விழுந்து தள்ளாடுகிறது- தே.மு.தி.க. இந்த கட்சியுடன் அ.தி.மு.க.தொண்டர்கள் ஆரம்பத்தில் இருந்தே உடன்பாட்டை விரும்பவில்லை.

என்ன காரணம்?

விவரமாக பேசினார் சென்னையை சேர்ந்த தொண்டர் ஒருவர்:

‘’ முதல் கோணல் முற்றும் கோணல் என்பதற்கு தே.மு.தி.க. கூட்டணியை பொருத்தமான உதாரணமாக சொல்லலாம். 2011 ஆம் ஆண்டு அம்மா இருந்த போது சட்டசபை தேர்தலுக்கு மெகா கூட்டணி உருவானது. கோவையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்ற முதல் கூட்டம் நடந்தது. அதற்கு வராமல் ‘டிமிக்கி’ கொடுத்த ஒரே கூட்டணி தலைவர் விஜயகாந்த் மட்டுமே’.என்று எரிச்சலாக ஆரம்பித்தவர் தொடர்ந்தார்:

‘’எதிர்க்கட்சி தலைவர் பதவி விஜயகாந்துக்கு கிடைக்க காரணமாக இருந்தவர் அம்மா. அவரை பேரவையிலேயே விமர்சித்து- அம்மாவின் கோபத்துக்கு ஆளானவர் இந்த ஆள். எந்த கட்சி தலைவரையும் மதிக்கும் குணம் இவருக்கு கிடையாது .கடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்தார். டெல்லியில் நடந்த பிரஸ் மீட்டில் கேள்வி கேட்ட பத்திரிகை யாளர்களை ‘மைக்கால் அடிப்பேன் என்று விஜயகாந்த் உரும- பக்கத்தில் இருந்த பொன்.ராதா கிருஷ்ணனே ஆடிப்போனதை உலகமே பார்த்து சிரித்தது’’ என்று முடித்து கொண்டார்.

அ.தி.மு.க., தி.மு.க. என இரு கட்சிகளுடன் ஒரே சமயத்தில் விஜய்காந்த் தரப்பு பேச- அவரது இரட்டை வேடத்தை  அம்பலப்படுத்தியது தி.மு.க. .மேலும் கூட்டணி கதவையும் சாத்தியது.

இந்த நிலையிலும் – ‘7 லோக்சபா + 1 ராஜ்யசபா +கரன்சி என தே.மு.தி.க.பிடிவாதமாக இருப்பது-அ.தி.மு.க.மேல்மட்ட தலைவர்களையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

எனினும் பா.ஜ.க.வின் அழுத்தம் காரணமாக 4 லோக்சபா தொகுதிகளை விட்டுக்கொடுக்க அ.தி.மு.க.முன் வந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.

முரண்டு பிடிக்காமல் முதலிலேயே வந்திருந்தால் ,கேட்ட இடங்களுடன்- பெரும் தொகையும் கொடுக்கப்பட்டிருக்கும். இப்போது தஞ்சாவூர், நீலகிரி உள்ளிட்ட வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ள தொகுதிகளே தே.மு.தி.க.வுக்கு அளிக்கப்படுமாம்.

சட்டசபையில் தங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை  என்று விஜயகாந்த் தரப்பு முனகியதால் , இடைத்தேர்தல் நடைபெறும் சோளிங்கர் தொகுதியை அவர் கட்சிக்கு ஒதுக்க  ஆரம்பத்தில் அ.தி.மு.க. முன் வந்ததாக தெரிகிறது.

‘இரட்டை சவாரி’ முயற்சியால் அந்த தொகுதியை தே.மு.தி.க. இழந்து விட்டது.

உடன்பாடு முடிவாகாததால் சென்னையில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் தே.மு.தி.க.பங்கேற்க வில்லை .அன்று  பேட்டி அளித்த எல்.கே.சுதீஷ் ‘’ இன்னும் நாலைந்து கூட்டங்களுக்கு பிரதமர் வரத்தானே போகிறார்.. அப்போது கலந்து கொண்டால் போகிறது’’ என அலட்சியமாக சொன்னதை பா.ஜ.க.உள்ளூர் தலைவர்கள் ரசிக்க வில்லையாம்.

வில்லங்கமாக ஆரம்பிக்கும் இந்த கூட்டணி-விஜயகாந்தால் இன்னும் எத்தனை இடையூறுகளை சந்திக்க போகிறது என்று தெரியவில்லை.

–பாப்பாங்குளம் பாரதி

More articles

Latest article