சென்னை:

மிழகம் முழுவதும் குடிநீர் கேட்டு தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மழை வேண்டி அதிமுக சார்பில் இன்று முக்கிய கோவில்களில் சிறப்பு யாகம் நடைபெற்று வருகிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி முதல் அதிமுக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்பட முக்கிய தலைகள் அனைத்தும் இன்று கோவில்களில் குவிந்து கடவுளை பிரார்த்தித்து  வருகிறார்கள். இவர்கள் பிரார்த்தனை செய்வது தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கவா அல்லது, தமிழக அரசு கவிழாமல் இருப்பதற்கா என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், வரும் 28ந்தேதி தமிழக சட்டமன்ற கூட்டம் கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தொடரின்போது, அதிமுக அரசு மீது திமுக மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, சபாநாயகர் தனபால் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழகத்தில் எழுந்துள்ள தண்ணீர் பிரச்சினை குறித்து திமுக சட்டமன்றத்தில் பிரச்சினை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக தண்ணீர் பஞ்சத்தை போக்க அதிமுக அரசு தனது அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள், முக்கிய தலைவர்கள் அந்தந்த மாவட்டங்களில்  இன்று யாகம் வளர்த்து பூஜை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற இந்து கோவில்களில் யாகம் நடத்தப்படுகிறது. சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் ஆலயத்தில் மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டது. இதில்  ஜெயக்குமார் உள்பட அதிமுக முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

கோவை பேரூர் பகுதியில் உள்ள பட்டீஸ்வரர் கோயிலில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் யாகம் நடைபெற்றது.

அதன்படி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பச்சமலையில் அமைந்துள்ள சுப்பிரமணியர் முருகன் கோயிலில் செங்கோட்டையன் மழை வேண்டியும் வருண பகவான் அருள்வேண்டியும் யாகபூஜையில் ஈடுபட்டார். ஐந்துக்கும் மேற்பட்ட வேத ஓதுவார்களைக் கொண்டு பூரண கும்ப கலசங்கள் வைத்து யாக வேள்வி நடைபெற்றது.

முதலில் விநாயகர் பூஜையும் அதனை தொடர்ந்து முருகன் அருள்வேண்டி சிறப்பு பூஜைகளும், அதன்பின்னர் வருணபகவான் மழை வேண்டி யாக வேள்வியில் நவதானியங்கள் செலுத்தியும் பூரணாதிதி செலுத்தியும் யாகவேள்வி நடைபெற்றது.

திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் சன்னதியில் மழை வேண்டி அதிமுக சார்பில் வர்ண ஜப யாகம் நடைபெற்றது. இதில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மற்றும் அதிமுகவினர் பங்கேற்றனர்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. இதில் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டார்.

கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் சிறப்பு யாகம் நடந்தது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் மழை வேண்டி நடைபெற்ற யாகத்தில் அமைச்சர் துரைக்கண்ணு கலந்துகொண்டார் . யாகத்தைத் தொடர்ந்து கோ பூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை உள்ளிட்டவையும் நடைபெற்றன.

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடந்த வருணஜப மகாயாகத்தில் அமைச்சர் காமராஜ் பங்கேற்றார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பொன்வரதராஜ பெருமாள் கோயிலில் நடந்த யாகத்தில் அமைச்சர் சரோஜா கலந்து கொண்டார்.

நாமக்கல் கொக்கராயன்பேட்டை பிரம்ம லிங்கேஸ்வரர் கோயிலில் அமைச்சர் தங்கமணி தலைமையில் யாகம் வளர்க்கப்பட்டது.

சென்னை அடுத்த பூவிருந்தவல்லி வைத்தீஸ்வரன் கோயிலில் வளர்க்கப்ப்டட சிறப்பு யாகத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பங்கேற்றார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சரவணப் பொய்கையில் வருண பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதற்கிடையில் தமிழகம் முழுவதும் இன்று தண்ணீர் பிரச்சினையை தீர்க்காத தமிழக அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக அரசின் மழை வேண்டி நடத்தும் கோவில் யாகமும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. சமூக வலைதளங்களில் அரசின் யாகம், மக்களின் நன்மைகாகவா அல்லது  எடப்பாடி அரசின் நன்மைக்காகவா  என்றும் கேள்வி விடுக்கப்பட்டு வருகிறது.