சென்னை
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக பாஜக கூட்டணி தொடர்வதாக இரு கட்சியினரும் உறுதி செய்துள்ளனர்.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்த பாமக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை, சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
சந்திப்பின் போது 9 மாவட்டங்களில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள இடங்கள் குறித்துப் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை, உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணியுடன் போட்டியிட்டு வெல்வோம்” எனத் தெரிவித்தார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி தொடர்கிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பா.ம.க.வைத் தவிர, பிற கட்சிகளுடனான கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.