சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் கூறினர். திருத்தணி முருகன் கோயிலுக்கு மாற்றுப்பாதை, அதியமான்கோட்டை, அங்கன்வாடி மையம், காந்தி ஆசிரமம் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை, பத்திரப்பதிவு அலுவலகங்களில் மாற்றுத்திறநாளிகளுக்கான வசதி உள்பட பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது, இன்று  2வது நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம்  மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது. இதில், புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள், ஊரக சாலை மேம்பாட்டு திட்டம் -புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இன்றைய கேள்வி நேரத்தின்போது, தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை மேம்படுத்தப்படுமா என அந்த தொகுதி ம்.எல்ஏ கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த  மு.பெ.சாமிநாதன்,  அதியமான் கோட்டத்தை மேம்படுத்தவும்  நடவடிக்கை எடுக்கப்படும் என  பதிலளித்தார்.

திருவிடைமருதூர் ஒன்றிய பகுதியில் சத்துணவு மையங்களுக்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா? என்று எம்.எல்.ஏ. கோவி.செழியன் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்த அமைச்ச கீதாஜீவன், போதிய அங்கன்வாடி மையங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் தயாரிக்கப்படும் பொருட்களை அரசே கொள்முதல் செய்யுமா என்று ஈஸ்வரன் எம்எல்ஏ கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த கைத்தறி துறை அமைச்சர் காந்தி, அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர்,   கதர் வாரியம் அதிக பயனாளர்களுடன் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் கதர் வாரியத்தில் பணியாளர்களின் எண்ணிக்கை 400 ஆக குறைக்கப்பட்டது. தற்போது பணியாளர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தி உள்ளது என அமைச்சர் காந்தி கூறினார்.

உறுப்பினரின் கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் சேகர்பாபு, திருத்தணி முருகன் கோயிலுக்கு மாற்றுப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். மேலும,  திருக்கழுக்குன்றம், திருநீர்மலை, திருச்சி மலைக்கோட்டை கோயிலுக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும். திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ஜூன் மாதம் திருப்பணிகள் நடைபெறும் என  கூறினார்.

மற்றொரு உறுப்பினர் கேள்விக்கு பதில் அளித்த பத்திரபதிவு துறை அமைச்சர் மூர்த்தி,  தமிழ்நாட்டில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களை மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும்,  575 சார்பதிவாளர் அலுவலகங்களில் 533 அலுவலகங்கள் அரசு கட்டிடத்திலும், 42 அலுவலகங்கள் தனியார் கட்டிடத்திலும் உள்ளது என கூறினார்.