ஸ்ரீஹரிகோட்டா: சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா விண்கலத்தின் மேக்னடோ மீட்டர் செயல்பட தொடங்கியது என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் நவீன விண்கலத்தை சில ஆண்டுகளாக வடிவமைத்தது. இதில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் நவீன கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த விண்கலம் 2023ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
இந்த விண்கலமானது விண்வெளியில் 127 நாட்கள் பயணித்து பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள எல்-1 எனும் லெக்ராஞ்சியன் புள்ளியை மையமாக கொண்ட சுற்றுப் பாதைக்கு சென்றது. அந்த இடத்தில் ஆய்வுக்காக ஜன. 6-ம் தேதி நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகள் அங்கிருந்தபடியே சூரியனை ஆய்வு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அதன்படி சூரியனை சுற்றி உள்ள கரோனா, போட்டோஸ்பியர் மற்றும் குரோமோஸ்பியர் பகுதிகளை விண்கலம் ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில், ஆதித்யா விண்கலத்தின் மேக்னடோ மீட்டர் சென்சார் பாகங்கள் 132 நாட்களுக்கு பிறகு வெற்றிகரமாக செயல்படத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில், ‘விண்வெளியில் காந்தப்புலத்தை அறிவதற்காக பொருத்தப்பட்டிருந்த 6 மீட்டர் மேக்னடோ மீட்டர் தற்போது வெற்றிகரமாக செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த கருவிசூரியன் மற்றும் இதர கிரகங்களின் காந்தப்புலத்தை அளவிடும். அதன்படி, 132 நாட்களாக இயக்கப்படாமல் இருந்த மேக்னடோமீட்டரின் ஆண்டனாக்கள் ஜன.11-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதிலுள்ள 2 சென்சார்களும் நல்லநிலையில் ஆய்வை தொடர்கின்றன’ என்று கூறப்பட்டுள்ளது.
இஸ்ரோ அனுப்பியுள்ள ஆதித்யா விண்கலம் அடுத்த 5 ஆண்டுகள் வரை சூரியனின்செயல்பாடுகளை கண்காணித்து ஆராயும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.