டெல்லி: அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிரான டெல்லி ஆர்ப்பாட்டத்தின்போது, காவல்துறையினர் அத்துமீறி, அடாவடியாக காங்கிரஸ் தலைவர்களிடம் நடந்து கொள்ளும் நிலையில், டெல்லியில் இன்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் நடைபெறுகிறது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ராகுல்காந்தி ஆஜராகி வருகிறார். இதற்க காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உள்பட நாடுமுழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது. டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் என பலர் தொடர் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் காங்கிரசாரிடம் டெல்லி காவல்துறையினர் கடுமையான முறையில் நடந்து கொள்கின்றனர். எம்.பி.க்களை குண்டுக்கட்டாக கட்டி தூக்கிச்செல்வதும், தாக்குதல் நடத்துவதும் தொடர்கிறது.

இதை கண்டித்து,  இன்று டெல்லியில் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில்  நடைபெறவுள்ளது. அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் காங்கிரஸ் எம்.பி.க்களை டெல்லி காவல்துறை அநாகரிகமாக நடத்துவது குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடத்த உள்ளனர்.

இதைத்தொடர்ந்து, மக்களவை  காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து காங்கிரஸ் எம்.பி.க்களை டெல்லி போலீசார் தாக்குவது தொடர்பாக புகார் மனு அளிக்க உள்ளது.