டில்லி

தானி குழுமம் இன்னும் 50 வருடங்களுக்கு மங்களூரு, அகமதாபாத் மற்றும் லக்னோ விமான நிலைய நிர்வாகத்தை ஏற்றுக் கொள்கிறது.

கடந்த முறை ஆண்ட மோடி அரசு ஆறு விமான நிலையங்களை அரசு – தனியார் பங்களிப்பில் நிர்வாகம் செய்ய முடிவு எடுத்தது. அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம், லக்னோ மற்றும் கவுகாத்தி ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. இந்த ஒப்பந்தப்புள்ளிகளில் அதிக அளவில் குத்தகைத் தொகை அளிப்பதாக அதானி குழுமம் அறிவித்திருந்தது.

நேற்று அரசு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் மங்களூர், அகமதாபாத் மற்றும் லக்னோ விமான நிலையங்களை அதானி குழுமத்துக்கு குத்தைகைக்கு விட மத்திய அரசின் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிர்வாகத்துக்கு அதிக தொகை அளிக்க முன் வந்த அதானி குழுமத்துக்கு இன்னும் 50 வருடங்கள் நிர்வாகம் செய்ய விமான நிலைய ஆணையம் உரிமை வழங்குகிறது” என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “இது வரை மூன்று விமான நிலையங்களுக்கான அமைச்சக ஒப்புதல் மட்டுமே பெறப்பட்டுள்ளது. மேலும் மூன்று விமான நிலைய நிர்வாகம் குறித்து அமைச்சக ஒப்புதல் இன்னும் பெறவில்லை. இந்த முறை மூலம் விமான நிலைய சேவைகள் முன்னேற்றமடைய உள்ளன. மேலும் விமான நிலையங்கள் தனியார் துறையின் மூலம் மேம்படுத்தப்பட உள்ளன. அரசுக்கான வருமானமும் அதிகரிக்க உள்ளன” என தெரிவித்துள்ளார்.