கள்ளக்குறிச்சி: அரசு மருத்துவமனையில் விஷ முறிவுக்கான மருந்து இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய நிலையில், விஷ முறிவுக்கான மருந்து போதிய அளவில் இருப்பு உள்ளது  என்றும், கள்ளச்சாராயம் குடித்த 140 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், விஷ சாராயம் அருந்தி வீட்டிலேயே இருந்த 55 பேர் மீட்கப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு 55ஐ எட்டியுள்ளது. மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதற்கடையில், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருந்து இல்லை என குற்றம் சாட்டியிருந்தார். மேலும் தமிழ்நாடு அரசு உண்மையை மறைக்க பார்க்கிறது என்றும் கூறினார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்தகள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்த்,  தற்போதைய நிலையில், கள்ளச்சாராயம் குடித்த  140 பேர் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு  56 சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே கவலைக்கிடமாக இருந்த 5 பேரின் உடல்நிலை சிகிச்சைக்கு பிறகு  முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

மருத்துவமனையில்,  விஷ முறிவுக்கான மருந்து போதிய அளவில் இருப்பு உள்ளது. சிகிச்சையில் இருப்பவர்களுக்கு அனைத்து வித பரிசோதனைகளும் மேற்கொள்கிறோம். உரிய மனநல ஆலோசனைக்கு பிறகே வீட்டுக்கு அனுப்புவோம் என்று கூறினார். இதையடுத்து

அரசின் ஆணைப்படி பாதிக்கப்பட்டு இறந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்றவர்,   கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று வரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.