சென்னை: இன்று நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் காரணமாக, தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை என கூறிய நிலையில், அவரது ரசிகர்கள், விஜயின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

இந்த கொண்டாட்டத்தின் போது, சாகச முயற்சியில் ஈடுபட சிறுவன் உடலில் பெட்ரோல் பற்றி தீப்பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அடுத்த நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில், சென்னை புறநகர் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் ஈசிஆர் சரவணன் ஏற்பாட்டில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.  அப்போது, ஒரு சிறுவன் கையில் தீயிட்டு கொளுத்திக் கொண்டு, ஓடுகளை உடைக்கும் சாகச முயற்சியை முன்னெடுத்தார். அதன்படி, சிறுவனின் கையின் மீது அருகிலிருந்த பயிற்சியாளர் சிறிய பாட்டிலில் இருந்த பெட்ரோலை ஊற்றி தீயிட்டுள்ளார். தொடர்ந்து ஓட்டை கையால் அடித்து உடைத்த பிறகும், தீ அணையாததால் ஏற்பட்ட வெப்பத்தை தாங்க முடியாமல் சிறுவன் தவித்துள்ளான். உடனடியாக அருகிலிருந்தவர்கள் சிறுவன் கையில் பற்றிய தீயை அணைக்க முயன்றனர். அப்போது பயிற்சியாளரின் கையில் இருந்த பிளாஸ்டிக் பாட்டில் குலுங்க, அதிலிருந்த பெட்ரோல் அவர் மீதும் அருகிலிருந்த சிறுவனின் மீதும் சிதறிவிழுந்து தீ மேலும் கொழுந்துவிட்டு எரிந்தது.

இதையடுத்து சுதாரித்துக் கொண்ட அருகிலிருந்தவர்கள் உடனடியாக செயல்பட்டு இருவர் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பாதிக்கப்பட்ட இருவருக்கும் பெரிய காயங்கள் எதுவும் இல்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Video: நன்றி – புதிய தலைமுறை