அடிலெய்டு: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், தனது முதல் இன்னிங்ஸை துவக்கிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க விக்கெட்டுகளை குறுகிய இடைவெளியில் அடுத்தடுத்து காலி செய்தனர் பும்ராவும் அஸ்வினும்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 244 ரன்களுக்கு அவுட்டாக, ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸை துவக்கியது. டேவிட் வார்னர், காயத்திலிருந்து இன்னும் குணமாகாததால், துவக்க வீரர்களாக மேத்யூ வேட் மற்றும் ஜோ பர்ன்ஸ் களமிறங்கினர்.

ஆனால், மேத்யூ வேட் 51 பந்துகளில் 8 ரன்களை எடுத்திருந்தபோது பும்ரா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அதேபோன்று, பர்ன்ஸ் 41 பந்துகளில் 8 ரன்கள் எடுத்திருந்தபோது அதே பும்ராவின் பந்தை பேடில் வாங்கி அவுட்டானார்.

பின்னர், மார்னஸ் மற்றும் ஸ்மித் ஜோடி சேர்ந்தார்கள். மார்னஸ் 41 பந்துகளில் 26 ரன்களை அடித்திருக்க, 29 பந்துகளை சந்தித்த டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் ஸ்மித், வெறும் 1 ரன் எடுத்த நிலையில், அஸ்வின் பந்தில் ரஹானேவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

தற்போதைய நிலையில், ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் இழந்து 45 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இந்திய அணி, ஆஸ்திரேலியாவை குறைந்த ரன்களுக்கு கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கைப் பிறந்துள்ளது.