தமிழில் இருந்து இந்தி சினிமாவுக்கு சென்ற நடிகை ஸ்ரீதேவி ‘பாலிவுட்’டில் கனவுக்கன்னியாக விளங்கினார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த அவர், அங்கு மரணம் அடைந்தார்.

இந்தி தயாரிப்பாளர் போனிகபூர் என்பவரை திருமணம் செய்த ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

இருவரும் சினிமாவில் நடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் போனிகபூர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அவர் கவுரவ வேடத்தில் நடித்து நெட்பிளிக்சில் வெளியான “AK VS. AK’’ என்ற சினிமா, போனிகபூரின் இன்னொரு முகத்தை திரைஉலகத்தினருக்கு வெளிச்சம் போட்டு காட்டியது.

இதனால், அவரை தேடி ஏகப்பட்ட சினிமா வாய்ப்புக்கள் வந்த வண்ணம் உள்ளன.

ஆனால் படத்தயாரிப்பில் போனிகபூர் பிஸியாக உள்ளதால் “ஆளை விடுங்கள்” என கும்பிடுபோட்டு, வீடு தேடி வந்த சினிமா ஆட்களை அனுப்பி விட்டார்.

போனிகபூர் இப்போது அஜீத் நடிக்கும் ‘வலிமை’ மற்றும் பவன் கல்யாண் நடிக்கும் ‘வகீல் ஷாகிப்’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறார்.

எனினும், ரன்பீர் கபூர், கதாநாயகனாக நடிக்கும் இந்தி படத்தில் அவருக்கு தந்தையாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார், போனிகபூர். ஸ்ரீதேவி குடும்பத்தில் இருந்து மற்றொரு சினிமா வாரிசு.

– பா. பாரதி