விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மாஸ்டர் திரைப்படம், பாதி இருக்கைகளுடன், தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

ஆனால் கேரளாவில் மாஸ்டர் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் 5 ஆம் தேதியே திரையரங்குகளை திறக்க முதல்-அமைச்சர் பினராயி விஜயன் அனுமதி கொடுத்து விட்டார். ஆனால் அங்கு திரையரங்குகள் திறக்கப்படவில்லை.

“கேளிக்கை வரியையும், மின்சார கட்டணத்தையும் ரத்து செய்தால் தான் திரையரங்குகளை திறப்போம்” என அங்குள்ள திரைப்பட வர்த்தக சபை அறிவித்துள்ளது.

இதனால் மாஸ்டர் படத்தை வாங்கிய கேரள விநியோகஸ்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.

மாஸ்டர் படத்தின் காசர்கோடு – கொச்சி ஏரியா உரிமையை பார்ச்சூன் சினிமா நிறுவனமும், ஆலப்புழை- திருவனந்தபுரம் ஏரியா உரிமையை மேஜிக் பிரேம்ஸ் கம்பெனியும் வாங்கியுள்ளது.

மாஸ்டர் பட தயாரிப்பாளருக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதமே அட்வான்ஸ் கொடுத்து விட்டனர்.

கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக இருந்த மாஸ்டர் இன்னும் ரிலீஸ் ஆகாததால், விநியோகஸ்தர்கள் பெரும் இழப்பை அடைந்துள்ளனர்.

இது குறித்து பார்ச்சூன் பிரேம்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதி சபீல் தெரிவித்த கருத்து : “கேரளாவில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் 30 கோடி ரூபாய் வசூலித்தது. இதனால் மாஸ்டர் படத்தை நல்ல விலை கொடுத்து வாங்கி உள்ளோம். தியேட்டர் உரிமையாளர்களிடம் இருந்து அட்வான்ஸ் வாங்கி விட்டோம். போஸ்டர்கள் எல்லாம் அடித்து விட்டோம்.

கேரளாவில் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட கடைசி கட்ட முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்” என்கிறார், சபீல்.

சினிமா தியேட்டர்களை திறப்பது குறித்து கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன், திருவனந்தபுரத்தில் இன்று (திங்கள்கிழமை) அங்குள்ள திரைப்பட வர்த்தக சபை பிரதிநிதிகளை சந்தித்து பேசுனார்.

தியேட்டர் அதிபர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக பினராயி விஜயன் கூறியதை தொடர்ந்து, தியேட்டர்களை திறக்க அவர்கள் சம்மதித்துள்ளனர்.

இன்று மாலை, தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடன் கலந்தாலோசித்து அதற்கான தேதியை அறிவிக்க இருப்பதாக தியேட்டர் அதிபர்கள் கூறியுள்ளனர்.

இதில் உடன்பாடு எட்டப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

– பா. பாரதி