சென்னை

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு நடிகை மனு அளித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.  மணிகண்டன் தன்னை மணந்து கொள்வதாக ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தன்னை கட்டாயப்படுத்திக்  கருக்கலைப்பு செய்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது.

கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி பெங்களூரில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் அளித்துள்ளது.  இதனிடையே அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  நடிகைக்குக் கருக் கலைப்பு செய்த மருத்துவரிடம் விசாரணை நடந்துள்ளது.  மேலும் ஆதாரங்களைத் தேடும் பணி நடந்து வருகிறது.

ஒரு வழக்கில் கைது நடந்த 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதியாகும்.  ஆனால் இந்த வழக்கில் 90 நாட்கள் செப்டம்பர் 18 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.  எனவே பாதிக்கப்பட்ட நடிகை மணிகண்டன் மீதான பாலியல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் நடிகை ”சென்னையில் பல பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மணிகண்டனுக்கு எதிரான வழக்கில் மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் தாமதப்படுத்தப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்

மேலும் கட்டாய கருக்கலைப்பு செய்த விவகாரத்தில் மருத்துவர் அருணின் மருத்துவ அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் நடிகை மனு அளித்துள்ளார்.