சென்னை:

டிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே   வரும் 23ந்தேதி தேர்தல் எம்ஜிஆர் – ஜானகி கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம், அங்கு எஸ்.வி.சேகரின் நாடகம் இருப்பதால், அங்கு நடத்த சென்னை உயர்நீதி மன்றம் தடைவிதித்து வேறு இடத்தை தேடும் படி அறிவுறுத்தியது. விசாரணையின்போது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், எம்.பி, எம்.எல்.ஏ தேர்தலை விட நடிகர் சங்கத் தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவது கவலை அளிப்பதாக கூறியிருந்தார்.

இதற்கிடையில், நடிகர் சங்க  தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று பாரதி பிரியன் உள்ளிட்ட 61 பேர்  சங்கங்களின் பதிவாளரிடம் புகார் அளித்திருந்தனர்.

விதிகளை மீறி உறுப்பினர்களை நீக்கியது தொடர்பாக  புகாரின் பேரில் உரிய விளக்கம் அளிக்கக் கோரி நடிகர் சங்கத்துக்கு பதிவாளர் கடந்த 14-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதற்கு நடிகர் சங்கம் சார்பில் பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தேர்தலில் அதிக குளறுபடிகள் உள்ளதால் தேர்தலை தற்காலிகமாக நிறுத்த மாவட்ட சங்க பதிவாளர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வாக்களிக்க தகுதி உள்ள வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்ய வேண்டியுள்ளதாகவும், அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வரை தேர்தலை ஒத்திவைக்கவும் மாவட்ட சங்க பதிவாளர் அலுவலகம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில்,  நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணியினர் கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கவர்னரை சந்தித்தனர்.  கவர்னரை விஷால், நாசர், கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் சந்தித்தனர்.  இந்த நிலையில் நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்க பதிவாளர் உத்தரவிட்டு உள்ளார்.