சென்னை: நடிகர் சங்க தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது? கேள்வி எழுப்பி உள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களது பதவி காலம் 2024-ம் ஆண்டு முடிவடைந்தது. இதையடுத்து புதிய தேர்தல் நடத்தப்படாமல், அவர்களுக்கே பதவி நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
இதை எதிர்த்து, நடிகர் சங்க உறுப்பினர் நம்பிராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், ‘2022-ம் ஆண்டு நடந்த தேர்தலின்படி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணை தலைவர்களாக பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களது பதவி காலம் 2024-ம் ஆண்டு முடிவடைந்தது. ஆனால், மேலும் 3 ஆண்டுகளுக்கு பதவியை நீட்டிப்பு செய்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் இயற்றியுள்ளனர். இதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” என்று வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பி.தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் சங்கத்தை நிர்வகிக்கவும், தேர்தலை நடத்தவும் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட, நீதிபதி, நடிகர் சங்கத்தின் தேர்தலை நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் கூறியநடிகர் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “தேர்தல் நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. தற்போது, நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகின்றன. பணிகள் முடிவடையும் நிலையில் தேர்தல் நடத்தினால் கட்டுமான பணிகள் பாதிக்கப்படும் என்பதால், நிர்வாகிகளின் பதவிக்காலத்தை நீட்டித்து, பொதுக்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்” என்று விளக்கம் அளித்தார்.
இதையடுத்து, இந்த வழக்கில், நடிகர் சங்க நிர்வாகிகள் தரப்பு வாதம் செய்வதற்காக விசாரணை வருகிற 15-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.