சென்னை: நடிகர் விஜயின் வெளிநாட்டு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் மேல்முறையீடு வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து இடைக்கால தடை விதித்துள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வேண்டுமானால், வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது. ஆனால் விஜய் தரப்பில் வரி கட்டாமல், அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது. இநத் வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்திருந்துடன், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.
நீதிபதியின் தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இதையடுத்து, நடிகர் விஜய் சார்பில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுமீதான விசாரணை இன்று நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வில் விசாரனைக்கு வந்தது. அப்போது, நடிகர் விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜயநாரயணன், நடிகர்களை கொச்சைப்படுத்தும் வகையில் தனி நீதிபதியின் உத்தரவு உள்ளதாகவும், நடிகர் விஜய் மீது மட்டும் தேவையற்ற விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல. வரி செலுத்த விஜய் தயாராக இருப்பதாகவும், தனி நீதிபதி தன்னை தேச விரோதியாக முத்திரை குத்தியுள்ளதால் இந்த கருத்துகளை நீக்க வேண்டும் என விஜய் தரப்பில் தெரிவிக்கபட்டது.
அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர், தனி நீதிபதியின் விமர்சனம் மற்றும் அபராதம் குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்க ஏதும் இல்லை என்றும், நுழைவு வரியை கணக்கிட்டு கூறுவதாகவும் அதன்படி 2012 கணக்கீட்டின் படி 20% ஏற்கனவே செலுத்தியுள்ளது போக மீதத்தை செலுத்தினால் போதும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கபட்டது.
இதையடுத்து நீதிபதிகள் தனி நீதிபதி விதித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், வணிக வரித்துறை வரித் தொகையை ஒரு வாரத்தில் கணக்கிட்டு, செலுத்திய நுழைவு வரி 20 சதவீதம் போக, மீதமுள்ள 80 சதவீதத்தை ஒரு வாரத்திற்குள் நடிகர் விஜய் செலுத்த செலான் பிறபிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 31ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.