9 மாவட்டங்களில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் மக்கள் இயக்க மாநில பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 20 மாவட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் தனது பெயரையோ, தனது ரசிகர் மன்றத்தின் பெயரையோ பயன்படுத்துவதை தடை செய்யக் கோரி தனது தந்தை மற்றும் தாய் உட்பட 11 நபர்கள் மீது நடிகர் விஜய் சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு இம்மாத இறுதியில் விசாரணைக்கு வர இருக்கிறது.