சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் குடும்ப சொத்து விவகாரம் தொடர்பான வழக்கில், அவரது மகள்கள் தாக்கல் செய்த கூடுதல் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழ் சினிமாவில் கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு உதாரணமாக விளங்கியவர் நடிகர்திலகம் சிவாஜி கணேசன். அவரது மறைவுக்கு பிறகு, அவரது கூட்டு குடும்பத்தில் சிறுசிறு விரிசல்கள் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது சொத்து பிரச்சினை பூதாகரமாக எழுந்துள்ளது.
நடிகர் சிவாஜிகணேசனுக்கு சாந்தி, ராஜ்வி என இரு மகள்களும், ராம்குமார், நடிகர் பிரபு என இரு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில், தங்களது தந்தை சுயமாக சம்பாதித்த சொத்துகளில் தங்களுக்கும் பங்கு வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சாந்தி, ராஜ்வி இருவரும் வழக்கு தொடுத்திருக்கின்றனர்.
தங்களது தந்தை சம்பாதித்த 270 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை தங்களது சகோதரர்களான ராம்குமார், பிரபு ஆகியோர் முறையாக நிர்வகிக்க வில்லை. வீடுகளின் வாடகை பங்கை எங்களுக்கு வழங்காமல் ஏமாற்றி விட்டனர். அதோடு, பெரும்பாலான சொத்துகளை எங்களுக்கு தெரியாமல் விற்பனை செய்து மோசடி செய்து விட்டனர் என அவ்விருவரும் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கின்றனர். மேலும், சொத்துக்களை தங்களுக்கு பிரித்து வழங்க உத்தரவிட கோரி சிவாஜி மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில், தற்போது சிவாஜி மகள்கsன சாந்தி, ராஜ்வி இருவரும், சென்னை அண்ணா சாலையில் உள்ள சாந்தி தியேட்டர் பங்குகள் மற்றும் அதன் சொத்துகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் சகோதரர்கள் ராம்குமார், பிரபு ஈடுபட்டுள்ளதாக கூறி, பிரதான வழக்கு விசாரணை முடியும் வரை இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனக் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த கூடுதல் மனுக்களை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரணை நடத்தினார். விசாரணையின்போது, சிவாஜி மகள்கள் தரப்பு வழக்கறிஞர், சிவாஜி கணேசனின் அனைத்து சொத்துக்களிலும் தங்களுக்கு சமபங்கு உள்ளதாகவும், சாந்தி திரையரங்கு பங்கு மற்றும் சொத்துக்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் அக்ஷயா ஹோம்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் சகோதரர்கள் ராம்குமார், பிரபு ஈடுபடுவதாகவும் பிரதான வழக்கு விசாரித்து முடிக்கும் வரை இது தொடர்பனா சொத்துக்கள் விற்பனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
இதற்க எதிர்ப்பு தெரிவிது, நடிகர் ராம்குமார், பிரபு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சாந்தி தியேட்டர் விவகாரத்தில் அனைத்து நடைமுறைகளும் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில் தற்போது இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் சாந்தி தியேட்டர் இடத்தை வாங்கும் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர், சதீஸ் பாரசுரன் ஆஜராகி, சாந்தி தியேட்டர் பங்குகள் முழுவதும் 2010 ம் ஆண்டிலேயே கைமாறி விட்டதாகவும், கட்டுமான பணிகள் முடித்த பிறகும், அவர்கள் குடும்ப பிரச்சினை காரணமாக குடியிருப்புகளை விற்க முடியாத நிலையில் இருப்பதாக வாதிடப்பட்டது. இந்த கூடுதல் மனுக்கள் மீது வாதங்கள் முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நீதிபதிகள், சாந்தி, ராஜ்வி இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.