திருச்சி; சர்க்கரை ஆலை நிலுவைத்தொகை உடனே வழங்க வலியுறும்தி அரசுக்கு எதிராக  போராட சென்ற விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு உள்பட  விவசாயிகள்  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் ஏராளமான சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக விருத்தாசலம், சித்தூர் ஆகிய ஊர்களில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலைகளில் விவசாயிகள் கொடுத்த கரும்புக்கு உரிய பணம் இதுவரை கொடுக்கப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.  கடந்த 2016 ஆண்டிலிருந்து இன்று வரை  35 லட்சம் டன் கரும்புகளை உற்பத்தி செய்து ஆலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆலை நிர்வாகம்  அதற்கான முழு தொகையினை தராமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.

விவசாயிகள் கொடத்த கரும்புக்கு தர வேண்டிய சுமார் 400 கோடி ரூபாய்  நிலுவையில் உள்ள நிலையில், ஆலை நிர்வாகம் வெறும் ரூ. 80 கோடி மட்டுமே திருப்பி தருவதாக  தெரிவித்துள்ளது. இது விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுடன், ஆலை நிர்வாகம் முழுத் தொகையையும் திருப்பித் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆலை நிர்வாகத்துக்கு எதிரான  இன்று போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த போராட்டத்துக்கு  தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை யில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து, அவர்கள் திருச்சியில் இருந்து புறப்பட தயாராகினர்.

இது பற்றி தகவல் அறிந்த மாநகர போலீசார் அதிகாலை 4மணி அளவிலேயே திருச்சி பேருந்து நிலையத்தில்  குவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த அய்யாக்கண்ணு மற்றும்  மேகராஜன் உள்ளிட்ட 11 விவசாயிகளை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் தனியார் ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்பட்டு, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கின்றனர் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியுள்ளனர்.