நடிகர் சிவாஜி கணேசன் குறித்து அவதூறாகப் பேசியதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு சிவாஜி சமூகநலப்பேரவையினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நடிகர் கமல்ஹாசனின் அரியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், “நடிகர் சிவாஜி கணேசன், கட்சி துவங்கி ஒரு எம்.எல்.ஏ.வைக்கூட பெற முடியவில்லை” என்று பதில் அளித்திருந்தார்.

ஜெயக்குமாரின் பேச்சுக்கு நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவையின் தலைவர் சந்திரசேகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

“‘ஜெயக்குமார் போன்ற பணம் சம்பாதிக்க மட்டுமே அரசியல் செய்ய நினைக்கும் சிலர் நடிகர் திலகம் சிவாஜி கட்சி ஆரம்பித்து தோற்றார் என்று கூற ஆரம்பித்திருக்கிறார்கள். இவரைப் போன்றவர்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இவர்களைப்போல யாருக்கோ வாலும், காலும் பிடித்து  ஓட்டுக்குப் பணம் கொடுத்து சிவாஜி எம்.எல்.ஏ-வாக ஆகவில்லைதான். திரையில் மின்னிய அவர், மக்களிடம் நடிக்கத் தெரியாததால் எம்.எல்.ஏ. ஆகவில்லை.

அவர் தனது சுயமரியாதையை சிறிது விட்டுக்கொடுத்திருந்தால் பெரிய பதவிகள் தேடி வந்திருக்கும்.

ஆனால் இன்று உங்கள் நிலையைப் பார்த்து நாடே சிரிக்கிறது.

அது மட்டுமல்ல.. சிவாஜி கணேசன்  மறைந்து பல ஆண்டுகள் ஆனபின்னும் போற்றப்படுகிறார். இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் மக்களால் போற்றப்படுவார்.

ஆனால், ஜெயக்குமார் போன்ற அனாமதேய அரசியல்வாதிகள் பதவி பறிபோனபின் அடையாளம் அழிந்து, இருந்த இடம் தெரியாமல் போவார்கள் என்பதுதே உண்மை.

இனியாவது  நடிகர் திலகம் மீது இத்தகைய அவதூறு பிரசாரத்தை ஜெயக்குமார் போன்றவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இல்லையெனில் நடிகர் திலகத்தின் லட்சோபட்சம் ரசிகர்கள் பதிலடி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்’ என்று அந்த அறிக்கையில் கே. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]