மதுரை: திண்டுக்கல் அருகே உள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் முறையான  அனுமதியின்றி நடிகர் பிரகாஷ் பங்களா கட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த புகார்கள்மீது நடவடிக்கை எடுக்க அந்த பகுதி பொதுமக்கள்  வலியுறுத்தி வருகின்றனர்.

‘நடிகர் பிரகாஷ்ராஜ், கொடைக்கானல் தாலுகா, பேத்துப்பாறை பகுதியில் பங்களாக கட்டி வருகிறார். இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மலைப்பகுதிகளில் கட்டிடங்கள் கட்ட தடை விதித்து நீதிமன்றங்கள் பல உத்தரவுகளை வழங்கியுள்ளன. ஆனால், அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை மீறி, பலர் மலைப்பாங்கான பகுதிகளில் கட்டிட்ங்களையும், பங்களாக்களையும், ஓய்வு விடுதிகளையும் கட்டி வருகின்றன. இதனால் வன விலங்குகள் பாதிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், கொடைக்கானல் பகுதியில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் விதிகளை மீறி பங்களாக்களை கட்டி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. கொடைக்கானலுக்கு, 10 கி.மீ., முன்னதாகவே இருக்கிறது பேத்துப்பாறை. பக்கத்தில் இஇயற்கை எழில் சூழ்ந்திருக்கும் வில்பட்டி.  கிராமத்தில்  நடிகர்கள் பாபி சிம்ஹாவும், பிரகாஷ் ராஜும்,  ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கி, பங்களா கட்டி உள்ளனர்.

நடிகர் பிரகாஷ் ராஜ், தன் பங்களாவுக்கு உரிய அரசு அனுமதி, அதாவது பஞ்சாயத்தில், அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. ஆனால், விதிகளை மீறி அரசு அதிகாரிகளும், மின்வாரியமும் கையூட்டு பெற்று,  அந்த பங்களாவுக்கு முறைகேடாக  வணிக பயன்பாட்டுக்கான மின்சார அனுமதி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதுபோல, நடிகர் பாபி சிம்ஹா, தன் பங்களாவை ஒட்டி இருக்கும், 2 ஏக்கர் அரசு நிலத்தை, தன் எல்லைக்குள் கொண்டு வந்து ஆக்கிரமித்துள்ளதாக கிராமத்தில் குற்றம் சாட்டி உள்ளனர். இவர்கள் லஞ்சம் கொடுத்து, உரிய பஞ்சாயத்து அனுமதி இல்லாமல், சட்டத்துக்கு புறம்பாக மின் அனுமதி பெற்றுள்ளார். அத்துடன், அருகில் இருக்கும் ரோட்டில் இருந்து, தன் பங்களாவுக்கு செல்ல, அரசு அனுமதியின்றி, பட்டா இடத்தில் ரோடு அமைத்துள்ளார் என கூறப்படுகிறது.

இந்த புகார்கள் அங்கு சமீபத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் வெளிச்சத்துக்கு வந்தது.  கடந்த 21ந்தேதி (ஆகஸ்டு 21, 2023) அன்று கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில நடைபெற்ற , விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில், பங்கேற்ற பேத்துப்பாறை, வில்பட்டி கிராமத்தை சேர்ந்த  விவசாயிகள் இதை எழுப்பி உள்ளனர்.

இதுதொடர்பாக,  ஆர்.டி.ஓ., ராஜாவிடம், ‘நடிகர் பிரகாஷ் ராஜ் பங்களா, எப்படி அரசு அனுமதியின்றி கட்டப்பட்டது? அதிகாரிகள் எப்படி அனுமதித்தீர்கள்?’, அதுபோல பாபி சிம்ஹா அரசு நிலத்தை ஆக்கிரமித்து இருக்கிறாரே அதன்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என, கேள்வி எழுப்ப இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள வில்பட்டி பஞ்சாயத்து தலைவர் பாக்கியலட்சுமி ,  வில்பட்டி பஞ்சாயத்தில், நடிகர் பிரகாஷ்ராஜ் பெயரில் வாங்கப்பட்டுள்ள நிலத்தில், வணிக பயன்பாட்டுக்காக பங்களா கட்டப்பட்டது, எங்களுக்கு தெரியாது. பேத்துப்பாறை விவசாயி மகேந்திரன், ஆர்.டி.ஓ.,விடம் கேட்ட பின் தான், எங்கள் கிராம பஞ்சாயத்துக்குள் இப்படியொரு பங்களா கட்டப்பட்ட விபரம் தெரிய வந்துள்ளது.

பங்களா, எங்கள் பஞ்சாயத்து அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருக்கிறது. அதேபோல, அடிமனைக்கான ரசீதும் கொடுக்கப்படவில்லை. ஆவணங்களை பார்த்து விட்டு தான் சொல்கிறேன். அனுமதி பெறாத பங்களாவுக்கு எப்படி வணிக பயன்பாட்டுக்கான மின் இணைப்பு கொடுத்தனர் என்பதை, மின் வாரியம் தான் சொல்ல வேண்டும்.

அதேபோல, பஞ்சாயத்து பகுதியில், அவர்கள் சாலை அமைத்திருந்தால், அதுவும் தவறு தான். அது குறித்தும் பஞ்சாயத்துக்கு தகவல் இல்லை. இது தொடர்பாக, வருவாய் துறை தான் விசாரிக்க வேண்டும். வருவாய் துறையோ, மின் வாரியமோ, பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் மக்கள் நலனுக்காக, நியாயமான விஷயங்களை செய்து கொடுங்கள் என்று சொன்னால், அதை செய்வதில்லை. ஆனால், இப்படி, தனியாருக்கு சட்ட விரோதமாக சலுகைகள் செய்கின்றனர் என தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து கூறிய கொடைக்கானல், மின்வாரிய உதவி கோட்டப் பொறியாளர்,  நடிகர் பிரகாஷ்ராஜ் பங்களாவுக்கு, தற்காலிக மின் இணைப்பு கேட்டு முறையாக விண்ணப்பித்துள்ளனர். வில்பட்டி பஞ்சாயத்துக்கு கட்டும் வரி ரசீது இணைக்கப்பட்டு உள்ளது. மின் வாரிய விதிகள்படி, தற்காலிக இணைப்புக்கு பஞ்சாயத்து வரி ரசீது இருந்தால் போதும்; கட்டட அனுமதி தேவையில்லை. பங்களா கட்டுமான பணிக்கு தான், இந்த இணைப்பு வாங்கி உள்ளனர். கட்டுமான பணி முடித்து, உரிய கட்டட அனுமதியோடு, மீண்டும் மின் வாரியத்தை அணுகினால், நிரந்தர மின் இணைப்பு வழங்கப்படும். யாராக இருந்தாலும், இது தான் நடைமுறை என்று தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கொடைக்கானல்  ராஜா, விவசாயிகள் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்படும் என்று கூறியதுடன்,  நடிகர் பிரகாஷ்ராஜ் பங்களா குறித்து சொல்லும் புகார் மிகவும் சீரியசானது. அதனால் தாசில்தாரை அழைத்து, விசாரிக்கச் சொல்லி உள்ளேன். நடிகர் பாபி சிம்ஹா பங்களா குறித்தும், இடம் ஆக்கிரமிப்பு குறித்தும் புகார் கூறப்பட்டது. இரண்டு புகார்கள் மீது விசாரிக்கப்படும். தேவையானால், சம்பந்தப்பட்ட இடங்கள் அளந்து சரிபார்க்கப்படும் என்றும் ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.

சர்ச்சைக்கு பெயர் பெற்றவர் நடிகர் பிரகாஷ்ராஜ். திறமையான கலைஞரான இவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்.  தமிழ்ப்படங்களில் நடித்து கல்லா கட்டி வரும் இவர், காவிரி பிரச்சினையில் கன்னடர்களுக்கு ஆதரவாகவே செயல்படுவார். சமீப காலமாக மத்திய பாஜக அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.