நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…
தலைவன் மறைஞ்சி 13 வருஷமாச்சு….
டேய் ராக்கா, மூக்கா, மாயாண்டி, பீட்டர், கபாலி.. எல்லாம் வாங்கடா. இவனை தூக்குங்கோடா…
என்னமாதிரியான அதட்டல், உருட்டல், மிரட்டல்..
கிட்டத்தட்ட எம்ஜிஆர், சிவாஜி ஜெமினி என மூவேந்தருக்கும் இவர்தான் இணையான வில்லன். அதிலும் சண்டைக்காட்சிகளுக்கு ஸ்கோப் உள்ள எம்ஜிஆர் படங்கள் என்றால், மிரட்டியிருப்பார் மனுஷன்.
1940-களில் கதாநாயகன் காமெடியன் குணச்சித்திர வேடங்கள் என ஆரம்பித்தாலும் வில்லன் என்று வந்தபோதுதான் எம்.என். நம்பியார், ஒரு எவரெஸ்ட் என்பது தெரியவந்தது..
மூடப்பழக்கங்களால் மூளைச்சலவை செய்து பாமரன் தொடங்கி அரசன் வரை அனைவரையும் ஆட்டிப்படைக்கும் மந்திரிகுமாரி படத்தின், அந்த ராஜகுரு வில்லன் பாத்திரம்.. 72 ஆண்டுகளை நெருங்கும் நிலையில் இன்னமும் எவர்கிரீன்..
படகோட்டி நீலமேகம், எங்கவீட்டுப்பிள்ளை ஜமீன்தார் கஜேந்திரன் , ஆயிரத்தில் ஒருவன் கப்பல் கொள்ளையன், குடியிருந்த கோயில் பூபதி-நாகப்பன்..
வில்லத்தனத்தில் கடுமையை நம்பியார் ஏற்ற ஏற்றத்தான் மாணிக்கம், இளங்கோ, மணிமாறன், சேகர் என ஹீரோ எம்ஜிஆரின் பாத்திரங்களுக்கு இந்த படங்களில் அவ்வளவு பெயர் கிடைத்தது!
திரைப்பட வாழ்க்கையில் நம்பியார் பாத்திரங்களை அலசினால் ஏகப்பட்ட அதிசயங்கள். 1957 மக்களைப் பெற்ற மகராசி படத்தில் எம்.என்.ராஜத்திற்கு அதற்கு நம்பியார் ஜோடி. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் நெருங்கிய நிலையில் அதே ஜோடி மீண்டும் வின்னர் படத்தில்.
வில்லன் பாத்திரங்களில் வெளுத்து வாங்கிய நம்பியார் நிஜ வாழ்க்கையில் எவ்வளவு சாது, எப்பேர்பட்ட நல்ல மனிதர் என்பது உலகமே அறிந்த விஷயம்.
தன்னுடைய கடைசி படம் வரை வில்லனாக தூக்கி சுமக்கும் அளவுக்கு எம்ஜிஆருக்கும் நம்பியாருக்கும் இடையில் அப்படி ஒரு பாசப் பிணைப்பு.
மக்கள் திலகம் எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டபோது நம்பியார் போகவில்லை.
சைவ சாப்பாடு, மனைவியையும் அழைத்துப்போனால் எம்ஜிஆருக்கு கூடுதல்செலவு என பல பிரச்சினைகளை மனதில் வைத்துக்கொண்டு வைத்து அவர் தவிர்த்துவிட்டார் என சொல்லுவார்கள்.
ஆயிரம் அம்சங்கள் இருந்தும் தனது கனவுப்படமான உ.சு.வாலிபனில் 30 ஆண்டுகால ஆஸ்தான வில்லன் நம்பியார் இல்லையே என்ற ஏக்கம்மட்டும் எம்ஜிஆரை குடைந்துகொண்டே இருந்தது.
திரைக்கதையில் நம்பியாருக்காக ஒரு பாத்திரம் உருவாக்கப்பட்டது. சென்னையிலேயே ஸ்டூடியோவில் ஜப்பான் புத்தர்கோவிலை செட்டாக போட்டார்கள்.
பலரும் அதை வெளிநாடு என்றே நினைத்துக்கொண்டார்கள். அதுவரை இல்லாத வித்தியாசமான மேக்கப்பில் எம்ஜிஆருடன் சண்டை..
ஒரேமுறை வந்தாலும் படத்தில் நம்பியாரின் காட்சி மட்டும் 13 நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக ஓடும். எம்எஸ்வியின் பின்னணி இசையோடு நடக்கும் நம்பியாருடனான விறுவிறுப்பான அந்த சண்டைக்காட்சி 48 ஆண்டுகள் கழித்து இன்றைக்கு பார்க்கும்போதும் அவ்வளவு பிரஷ்ஷாக இருக்கும்..!
எக்ஸ்போ 70, தாய்லாந்து நடிகை மேட்டா ரூங்ராத் டூயட் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ பாடல் ஆகிய டாப்-2 வெளி நாட்டு அம்சங்கள் படுத்திய பரவசத்திற்கு, கொஞ்சமும் சளைக்காமல், ரசிகர்களை அந்த சண்டைக் காட்சியால் திக்குமுக்காட வைத்தார், வெளிநாட்டிற்கே போகாமல், சென்னையில் அசத்திய எம்.என். நம்பியார்.
கையைப்பிசைந்து கொண்டு அவ்வளவு உக்கிரமமான லுக்கோடு படத்துக்கு படம் அலறவைக்கிற அந்த முகம்..
வி மிஸ்யூ நம்பியார் சார்