நடிகர் கலாபவன்மணி மரணம்: சிபிஐ விசாரணைக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவு!

Must read

திருவனந்தபுரம்,

பிரபல நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகர் கலாபவன் மணி மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த கேரள ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

கலாபவன்மணி தமிழ், மலையாளம் உள்பட ஏராளமான  படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த வருடம் மார்ச் மாதம் 6–ந்தேதி திடீரென மரணமடைந்தார்.

தனது பண்ணை வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

அவரது மரணம் கேரள திரை உலகத்தினரிடையே கடும் அதிர்ச்சியை உருவாக்கியது.

கலாபவன் மணியின் திடீர் மரணம் குறித்து அவரது குடும்பத்தினர் பிரேத பரிசோதனை செய்யும்படி வற்புறுத்தினார்.

அதைத்தொடர்ந்து, அவரது உடல் பிரேத பரிசோதனை நடைபெற்றது. அதன் அறிக்கையில், அவர் குடித்த மதுவில் அதிக அளவு மெத்தனால் ஆல்ஹகால் அதிக அளவு கலந்திருந்தது தெரிய வந்தது.

சாதாரணமாக கடைகளில் விற்கப்படும் மதுவகைகளில் மெத்தனால் கலப்பது இல்லை. ஆகவே, அவர் அருந்திய மதுவில் மெத்தனால் எப்படி வந்தது என்பது மர்மமாக இருப்பதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர்.

அதைத்தொடர்ந்து போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டனர்.  சுமார் 300 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும்,  கலாபவன் மணியின் 6 நண்பர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது என்றும், ஆனால் கலாபவன்மணி மரணத்திற்கான காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை என்று மாநில போலீசார் கூறினர்.

இதன் காரணமாக விசாரணை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் அவரது தம்பி ராமகிருஷ்ணன் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதி கலாபவன் மணி மரணத்தில் உள்ள சந்தேகம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

More articles

Latest article