சென்னை,
போதையில் கார் ஓட்டி அடையாறு அருகே சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்தை ஏற்படுத்திய நடிகர் ஜெய் தனது நண்பர் பிரேம்ஜியுடன் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 3 ஆண்டுகளில் இது இரண்டாவது விபத்து என்பதால், அவரது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
விருந்து நிகழ்ச்சி முடிந்து நடிகர் ஜெய் ‘ஆடி’ காரில் வீட்டிற்கு சென்றார். காரை அவரே ஓட்டினார். காரில் அவருடன் நடிகர் பிரேம்ஜியுன் உடனிருந்துள்ளார்
கோவா, ராஜாராணி போன்ற பிரபலமான படங்களில் நடித்தவர் நடிகர் ஜெய். இவர் நேற்று இரவு பார்ட்டியில் கலந்துகொண்டு காரில் அதிவேகமாக வந்துள்ளார். அவருடன் அவரது நண்பரான நடிகர் பிரேம்ஜியும் இருந்துள்ளார்.
போதையின் காரணமாக கார் அடையாறு எல்.பி ரோட்டில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. போதையின் காரணமாக இருவரும் காருக்குள்ளேயே மயக்க நிலையில் இருந்துள்ளனர்.
இதைப்பார்த்த பொதுமக்கள் அடையாறு போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவர்களை எழுப்பி, அவர்கள் இருவர்மீது வழக்கு பதிவு செய்து அடையாறு போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
போதை தெளிந்த பிறகு அவர்களிடம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இதைத் தொடர்ந்து நடிகர் ஜெய் மீது குடிபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை உண்டாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக போலீசார் கூறி உள்ளனர்.
இது இரண்டாவது விபத்து என்பதால், அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
ஜெய் ஏற்கனவே மயிலாப்பூரில் குடிபோதையில் காரை ஓட்டிய வழக்கில் சிக்கி அபராதம் செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது