தமிழ்த் திரைப்பட நடிகர் கவுண்டமணி மீது சென்னையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் தொடர்ந்த வழக்கில் கவுண்டமணிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள 5 கிரவுண்ட் 454 சதுர அடி நிலத்தை 1996 ம் ஆண்டு நளினி பாய் என்பவரிடமிருந்து நடிகர் கவுண்டமணி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலத்தில் 15 மாதங்களுக்குள் 22,700 சதுர அடியில் வணிக வளாகம் கட்ட ஸ்ரீ அபிராமி பவுண்டேசன் என்ற கட்டுமான நிறுவனத்துடன் 1996ல் ஒப்பந்தம் போடப்பட்டது.
ஒப்பந்தத்தின்படி, கட்டுமான செலவு மற்றும் ஒப்பந்ததாரர் கட்டணமாக ₹3.58 கோடியை தவணைமுறையில் வழங்க நடிகர் கவுண்டமணி ஒப்புக்கொண்டார்.
மார்ச் 1996 முதல் பிப்ரவரி 1999 வரை ₹1.04 கோடி செலுத்தப்பட்ட போதிலும், கட்டுமானப் பணிகள் அதற்கேற்ற வகையில் மேற்கொள்ளப்படாததால் ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் நிறுவனத்தின் மீது 1998ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் நடைபெற்ற நிலையில், நிலத்தின் உண்மையான உரிமையாளரிடம் இருந்து ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் பங்குதாரரான ஆர். பிரேமநாயகம் பொது அதிகாரம் பெற்றதாகவும் பிரேமநாயகம் தான் இந்த சொத்தை நடிகர் கவுண்டமணி மற்றும் அவரது குடும்பத்திற்கு வாங்கிக் கொடுத்தார் என்றும் தெரிவித்தது.
நடிகர் கவுண்டமணியுடன் நிலத்திற்கு மட்டுமன்றி கட்டுமானத்திற்கும் சேர்த்து ஒப்பந்தம் போடப்பட்டது என்று தெரிவித்த அந்நிறுவனம் சொத்தில் உள்ள குத்தகைதாரர்களை காலி செய்யவும், வணிக வளாகம் கட்டுவதற்கான கட்டிடத் திட்ட அனுமதி மற்றும் பிற அனுமதிகளைப் பெறவும் ₹1 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாகவும் கூறியது.
சம்பந்தப்பட்ட காலத்தில் கவுண்டமணி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்ததால் அவர் ஒப்புக்கொண்ட ₹3.58 கோடியில் ₹1.04 கோடியை மட்டுமே வழங்கினார் என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில், 2003-ஆம் ஆண்டு இந்த கட்டுமான பணியைக் கைவிடுவதாக ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் அறிவித்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ராமசாமி, திட்டத்தை முடித்திருந்தால் மட்டுமே நிறுவனம் வட்டி கோர முடியும் என்றும் இல்லையெனில் அப்படி கேட்கமுடியாது என்றும் கூறினார். மேலும், ரூ. 46.51 லட்சம் மதிப்பிலான கட்டுமானப் பணிகள் மட்டும் நிறைவடைந்துள்ளதாக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆணையர் மதிப்பீடு செய்ததாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.
எனவே, பில்டர் நடிகர் மற்றும் அவரது குடும்பத்தினரிடமிருந்து ₹63.01 லட்சத்தை அதிகமாகப் பெற்றுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. எவ்வாறாயினும், நிலுவைத் தொகையை செலுத்தாத குற்றச்சாட்டின் பேரில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நிறுவனம் சொத்தை ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது என்று நீதிபதி கூறினார்.
நிலுவைத் தொகைகள் ஏதேனும் இருந்தால் மட்டுமே அதை வசூலிக்க வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்று சுட்டிக்காட்டிய நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, சொத்தை ஆக்கிரமித்திருந்த காரணத்தால் ஆகஸ்ட் 1, 2008 முதல் மாதம் ரூ. 1 லட்சம் வீதம் கணக்கிட்டு கவுண்டமணி, அவரது மனைவி சி.எம். சாந்தி மற்றும் மகள்கள் சி.எம். செல்வி மற்றும் சி.எம். சுமித்ரா ஆகியோருக்கு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.
இது தொடர்பாக ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நடைபெற்று வந்தது திட்டம் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்படாததால், பில்டருக்கு ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடந்த 26 ஆண்டுகளாக சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக ஏற்பட்ட செலவினங்களுக்காக, நடிகர் கவுண்டமணி ₹40 கோடிக்கு மேல் செலுத்த வேண்டும் என்று வாதிடப்பட்டது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள், 2019ம் ஆண்டு தனி நீதிபதி அளித்த தீர்ப்பை உறுதி செய்ததுடன் நிலத்தை உடனடியாக நடிகர் கவுண்டமணி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டனர்.
இதனால் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்போராட்டம் நடத்தி வந்த நடிகர் கவுண்டமணிக்கு வெற்றி கிடைத்துள்ளது.