தேனி:

சொந்த ஊரின் குடும்ப கோவிலுக்கு சென்ற  நடிகர் தனுஷ், தாங்கள் உபயோகப்படுத்திய  கேரவனுக்கு அனுமதியின்றி மின்சாரம் எடுத்ததையடுத்து அபராதம் விதிக்கப்பட்டது.

நடிகர் தனுஷின் சொந்த ஊர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள முத்துரெங்காபுரம். இந்த  கிராமத்தில் நடிகர் தனுஷ் குடும்பத்தினருக்க பாத்தியமான  கஸ்தூரி அங்கம்மாள் கோவில் உள்ளது.

இது தனுஷின்  குலதெய்வ கோவில் என்பதால், ஆடிப்பெருக்கை முன்னிட்டு நடிகர் தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா, தனுசின் தந்தை இயக்குனர் கஸ்தூரிராஜா, தாய் விஜயலட்சுமி ஆகியோர் முத்துரெங்காபுரம் கிராமத்திற்கு சென்றனர்.

அவர்கள் வருகையை முன்னிட்டு முன்கூட்டியே கேரவன் முத்துரெங்காபுரம் கிராமத்தில் நிறுத்தப்பட்டது.

இந்த கேரவனுக்கு கிராமத்தில் உள்ள ஒரு மின்கம்பத்தில் இருந்து அனுமதியின்றி மின்சாரம் எடுக்கபட்டதாக கூறப்பட்டது.

காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை மின்சாரம் முறைகேடாக எடுக்கப்பட்டதாக மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இதையடுத்து அங்கு சென்ற மின்வாரிய அதிகாரிகள் கேரவனின் டிரைவர் மற்றும் நடிகர் தனுஷ் உடன் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அனுமதியின்றி மின்சாரம் எடுத்தது தெரியவந்தது.

சுமார் 7 ஆயிரம் வாட்ஸ் அளவில் மின்சாரம் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து முறைகேடாக மின்சாரத்தை திருடியதாக கேரவனை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஆண்டிபட்டி மின்வாரிய அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும் கேரவன் உரிமையாளருக்கு 15 ஆயிரம் ரூபாய் மின்கட்டணமும், 65 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர்.