பீகாரைச் சேர்ந்த நபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக சமூக வலைதளத்தில் கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவியது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஆளுநர் மாளிகை தனி நபருக்கு எதிரான எந்த தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையையும் ஆளுநர் அங்கீகரிக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “பீகாரைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என சமூகவலைதளங்களில் செய்தி பரப்பப்பட்டு வருவதாக ஆளுநர் மாளிகை கவனத்துக்கு வந்துள்ளது.

அந்த தகவல் உண்மையல்ல. அதுபோன்று எந்தவொரு தனிநபருக்கும் எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.எனவே, இதுபோன்ற தவறான தகவல்களை பகிர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பீகார் யூ-டியூபர் மணிஷ் காஷ்யப் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.