சென்னை

நாளை முதல் தமிழகத்தில் குளிர்சாதன வசதிகள் கொண்ட பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாகப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.  அவற்றில் ஒன்றாக அனைத்து பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டன.  தொற்ரு குறைந்ததால் சிறிது சிறிதாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.  அதன்படி தற்போது குளிர்சாதன வசதி இல்லாத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன

தமிழக அரசுக்கு பயணிகள் தரப்பில் இருந்து குளிர்சாதன பேருந்துகளை இயக்க வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டன.   இந்த கோரிக்கைகளைத் தமிழக அரசு பரிசீலித்து  வந்தது.  இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் நாளை அதாவது அக்டோபர் முதல் தேதியில் இருந்து தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் பேருந்து இயக்கப்படும் என அறிவித்தார்.

இது குறித்து அமைச்சர் ராஜ கண்ணப்பன்,  “ குளிர்சாதன பேருந்துகள் தூய்மைப் படுத்தி, பழுதுபார்க்கப்பட்டு நாளை முதல் இயக்குவதற்கு தயார்ப்படுத்தப்பட்டு வருகின்றன. அவை நாளை முதல் இயக்கப்பட இருக்கின்றன.  இந்த பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் முககவசம் அணிய வேண்டும். கிருமிநாசினி மூலம் கைகளைச் சுத்தம் செய்த பிறகே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் குளிர் சாதனப் பேருந்துகள் இயக்கப்பட இருப்பதால் அவற்றைத் தயார் செய்யும் இறுதிக்கட்ட பணிகளில் போக்குவரத்து பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.   தமிழக அரசு விரைவு போக்குவரத்துக்கழக பணிமனையில் உள்ள குளிர்சாதனப் பேருந்துகள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தயார்ப்படுத்தப்பட்டு வருகின்றன.