ஐதராபாத்:

தலித் பேராசிரியரை பேஸ்புக்கில் தரக்குறைவாக விமர்சித்த ஏபிவிபி மாணவர் தலைவர் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஐதாராபாத் பல்கலைக்கழக பொருளாதார பிரிவு பேராசிரியர் லட்சுமி நாராயணா. வரலாற்றுத் துறையின் ஆய்வு மாணவரான கல்ராம் பல்சானியா ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் பல்கலைக்கழக தலைவராகவும் உள்ளார்.

கடந்த ஆண்டு பல்கலைக்கழக தேர்வில் ‘‘கல்வித்துறையில் காவி மயம்’’ என்பது குறித்த ஒரு கேள்வியை லட்சுமி நாராயணன் கேள்வி தாளில் தொகுத்திருந்தார். இதனால் பல்சானியா பேராசிரியர் மீது விரோதம் கொண்டிருந்தார்.

கடந்த நவம்பரில் பல்சானியா தனது பேஸ்புக் பக்கத்தில் லட்சுமி நாராயணாவை கடுமையாகவும், அவதூறாகவும் விமர்சனம் செய்திருந்தார். இது குறித்து லட்சுமி நாராயணா துணைவேந்தர் அப்பாராவ், செனட் உறுப்பினர்களிடம் புகார் அளித்தார். பல்சானியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலித் மாணவர் அமைப்புகளும் வலியுறுத்தின.

இதை தொடர்ந்து பல்சானியாவை ஒரு வருடத்திற்கு பல்கலையிலிருந்து நீக்கம் செய்ய வேண்டுமென ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரையை பல்கலைக்கழக நிர்வாகம் அமல்படுத்தி உத்தரவிட்டது. மேலும் ரூ.30 ஆயிரம் அபாரதமும் விதிக்கப்பட்டுள்ளது.