டில்லி:
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடை சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே உள்ள வன்கொடுமை சட்டத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் உடடினயாக கைது செய்ய வகை செய்யப்பட்டிருந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடை சட்டத்தின்படி குற்றம் சாட்டப்பட்டோரை, உடனடியாக கைது செய்யும் விதிமுறையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
வடமாநில போராட்டம் காரணமாக, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய இருப்பதாக கூறியது.
ஆனால், தலித் அமைப்பினர் அதை செவிமடுக்காமல், நேற்று பாரத் பந்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி வட மாநிலங்களில் பல இடங்களில் எஸ்., எஸ்.டி. அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பல இடங்களில் வன்முறையாக மாறியது.
பஞ்சாப், ஒடிஷா, மத்திய பிரதேசம் மாநிலங்களில் நடைபெற்ற வன்முறையில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி போராட்டத்தை ஓடுக்கினிர்.
மத்திய பிரதேசத்தில் மொரெனாவில் நடந்த வன்முறை போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதேபோல் குவாலியரில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் இரண்டு போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர்.
பிந்த் மாவட்டத்திலும் ஒருவர் உயிரிழந்து உள்ளார். மேலும் கலவரத்தில் ஈடுப்பட்ட 9 பேர் படுகாயமடைந்து உள்ளனர். ஒடிசா, பஞ்சாப், உத்தரபிரதேசம் என வடமாநிலங்களியில் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ள நிலையில் மத்திய பிரதேச மாநிலம் குவாலியர், மொரெனா மற்றும் பிந்த் மாவட்டங்களில் வலைதள சேவையும் தடை செய்யப்பட்டு உள்ளது.
பேருந்து எரிப்பு வன்முறை தீவிரமடைந்ததையடுத்து சில இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்ரகாண்ட் டேராடூன் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியின் பல இடங்களில் கார், பேருந்து தீ வைத்து எறிக்கப்பட்டுள்ளது. இதனால் வடமாநிலங்களின் பல இடங்களில் பதற்றம் நிலவுகிறது.
நேற்று நடைபெற்ற போராட்டத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வட மாநிலங்களில் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், பல இடங்களில் ரெயில்சேவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.