டில்லி

நேற்று இரவு டில்லிக்கு கிளம்பி உள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எதிர்கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி வந்தார்.    ஆனால் மத்திய அரசு அதை மறுத்து விட்டது.   சிறப்பு அந்தஸ்துக்கு சமமான நிதி உதவி செய்ய மட்டுமே ஒப்புக் கொண்டது.   இதை எதிர்த்து அமைச்சரவையில் இருந்து விலகிய தெலுங்கு தேசம் கட்சி மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில் சந்திரபாபு நாயுடு நேற்று இரவு டில்லிக்கு கிளம்பி உள்ளார்.  அவர் டில்லியில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.   அந்த பயணத்தின் போது அவர் எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார்.  தனது பயணம் குறித்து சந்திரபாபு நாயுடு, “எனது இந்த இரு நாள் சுற்றுப்பயணம் மாநில நலனை முன்னிருத்தி மேற்கொண்டுள்ளேன்.

பாராளுமன்றத்தில் உள்ள் அனைத்து தரப்பு எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளேன்.  அவர்களிடம் ஆந்திராவின் நிலை குறித்து எடுத்துரைத்து ஆதரவை கோர உத்தேசித்துள்ளேன்.   முந்தைய பிரதமர் மன்மோகன் சிங் ராஜ்யசபையில் உறுதி அளித்த சிறப்பு அந்தஸ்து கோருவதில் எந்த வித சமாதானத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம்.

ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சி மோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சபாநாயகரிடம் அளித்துள்ளது.   அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பாராளுமன்றத்தில் வலியுறுத்த உள்ளோம்.   பாராளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் நீதிக்காக தெலுங்கு தேச உறுப்பினர்கள் போராட்டம் நடத்துவார்கள்”  என தெரிவித்துள்ளார்.