சென்னை

பிரத்மர் மோடி மற்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சந்திப்பு குறித்த விமர்சனங்களுக்கு இணையத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

நிதி அயோக் கூட்டத்தில் பங்கேற்க சென்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்த புகைப்படத்தை வைத்து இணையத்தில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.  அந்த விமர்சனங்களுக்கும் இணையத்திலேயே பதில் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,

”இந்தப் படத்தைப் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் பயந்துவிட்டார், பம்மி விட்டார் என்றெல்லாம் பகடிகள். தமிழக அரசியலில் இருந்த பெரிய பிரச்னைகளில் ஒன்று ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவருக்கிடையே இருந்த பகைமை.

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள நேரும் என்பதால் சட்டசபைக்கே வராமல் கூட இருந்தவர் ஜெ. இவர் திட்டத்தை அவர் நிறுத்துவதும் அவர் திட்டத்தை இவர் நிறுத்துவதும் என்று மக்கள் வரிப்பணம் போர்டுகளை மாற்றி எழுதவே வீணடிக்கப்படுவது இங்கே நடந்தது. மருத்துவமனையாகவும் இல்லாமல் சட்டமன்ற வளாகமாகவும் இல்லாமல் பரிதாபமாக நிற்கும் ஓமந்தூரார் தோட்டமே இதற்கு சாட்சி.

கொள்கை அல்லது தனிப்பட்ட விரோதம் தாண்டி ஒருவருக்கு மக்கள் அளித்த பதவியை மதிக்க வேண்டும். அது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது. அப்போதே ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நிவாரணத்துக்காக காசோலை வழங்கியவர் ஸ்டாலின். அதற்காக நிறைய திட்டுகளையும் வாங்கினார். அவருடைய அரசியல் பாணி என்பது Reconciliation என்பதை முன்னெடுப்பதுதான்.

இந்தப் படத்தை வித்தியாசமாகப் பார்ப்பவர்கள் டெல்லி அரசியல் பற்றி அறியாதவர்கள். அங்கே பாஜக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்கள் வீட்டு விருந்துகளுக்கும் விழாக்களுக்கும் மாற்றி மாற்றி அழைத்துக் கொள்வார்கள். அடுத்த நாளே நாடாளுமன்றத்தில் அடித்துப் பிறாண்டிக் கொள்வார்கள். அது தனி டிபார்ட்மெண்ட்.

இரண்டு மாநில முதல்வர்களும் தேசத்தின் பிரதமரும் இங்கே சந்திக்கிறார்கள். கட்சிகள், கொள்கைகள் ஆகியவற்றைத் தாண்டி ஒருவரை ஒருவர் மதித்து நடப்பதுதான் மக்களுக்கும் அரசியலமைப்புக்கும் அவர்கள் செய்யும் மரியாதை.”

என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது,