தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்ற போது, மயங்கி விழுந்த மூத்த கலைஞர் ஒருவருக்கு நடிகர் அபி சரவணன் உதவியிருப்பது பலரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தலைமை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்களித்துவிட்டு நடிகர் விஜய் வெளியே வந்தபோது, கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது கூட்டத்தில் வயதான ஒருவர் மயங்கி கிடந்திருக்கிறார். அதை பார்த்த நடிகர் அபி சரவணன், அவர் அருகே சென்ற பார்த்தபோது, அவர் நடிகர் சங்க வாழ்நாள் உறுப்பினர் சேலம் சுந்தரம் என்பது தெரியவந்தது. 88 வயதான அவர் வாக்களிக்க, தான் வசித்து வரும் முதியோர் இல்லத்தில் இருந்து பேருந்தில் வந்திருக்கிறார். வாக்களித்துவிட்டு வெளியே வரும்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாகவும், கடும் வெயில் காரணமாகவும் அவர் மயங்கி விழுந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

பின்னர் அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அபி சரவணன், அங்கு அவருக்கு சிகிச்சைகள் அளித்த பின்னர் அவரை பத்திரமாக போரூரில் உள்ள முதியோர் விடுதி ஒன்றில் சேர்த்துவிட்டு, தனது படபிடிப்புக்காக வெளியூர் சென்றார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அபி சரவணன், “ஓட்டளிக்க முதியோர் இலலததில் இருந்து தனியாளாக பஸ்ஸில வந்தவர், வெயில் தாளாமல் மயங்கி சுருண்டு விழுந்து கிடந்தார். எந்த காரில் எந்த நடிகர் வருவார் என ஆவலாக ஓடி திரிந்த மீடியா கால்களுக்கும், காமிரா கண்களுக்கும் இவர் தெரியவில்லை போல. ஏன், பிரச்சாரத்தில் பரபரபபாய் இருந்த பலருக்கும் கூட தெரியவில்லை போல.

உடனடியாக இரு அணியை சேர்ந்தவர்களும் தகவல் அனுப்பியும், பதில் கிடைக்காமல் சுந்தரம் ஜயா அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவசோதனை செய்து ஆசுவாசடுத்தி அவரது விருப்பத்தின் பேரில் போரூரில் உள்ள அவரது முதியோர் விடுதியில் கொண்டு பத்திரமாக சேர்த்த போது தான் நிம்மதி வந்தது. நடிகர் சங்க தேர்ததலில் வாக்களித்துவிட்டு வரும்போதே அதே வளாகத்தில் மயக்கமுற்ற நலிந்த மூத்த கலைஞரை பத்திரமாக அவரது முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு படப்பிடிப்பிற்காக மீண்டும் வேலூரை நோக்கி பயணம் செய்கிறேன். நலிந்த கலைஞர்களுக்கு நல திட்ட உதவி என வாக்குதிறுதி அளித்த அணி வெற்றி கொண்டு உண்மையாகவே உதவினால் நலம்” என்று தெரிவித்துள்ளார்.