ராமநாதபுரம்:
ராமேஸ்வரம் அப்துல்கலாம் நினைவிடத்தில் அவரது உருவ சிலை வைக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற ஜமாஅத்துல் உலமா சபையின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உலமாக்கள் கூட்டம்
உலமாக்கள் கூட்டம்

முன்னாள் ஜனாதிபதி, ஏவுகனை நாயுகன் அப்துல்கலாம்  நினைவிடம் ராமேஸ்வரம் அருகில் உள்ள பேய்க்கரும்பு எனுமிடத்தில் அமைந்துள்ளது. அவரது நினைவை போற்றும் வகையில் நினைவிடம் அமைந்துள்ள இடத்தின் அருகிலேயே அறிவுசார் மையம், அருங்காட்சியகம், மணிமண்டபம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அத்துடன் அவரது முழு உருவ சிலையை நிறுவவும் முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது.
சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து  ராமநாதபுரத்தில் உலமாக்கள் கூட்டம் நடைபெற்றது.   அதில், ராமேசுவரம் நினைவிடத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு சிலை வைப்பது இஸ்லாமிய மார்க்கத்துக்கு விரோதமானது.  இதுவரை இஸ்லாமிய தலைவர்கள் யாருக்கும் சிலை வைக்கப்படவில்லை. சிலை வைப்பது இஸ்லாமிய மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகும்.
எனவே மத்திய, மாநில அரசுகள் அப்துல் கலாமுக்கு மணிமண்டபம், நூலகம், ஆராய்ச்சிக்கூடம் அமைப்பது போன்றவற்றை மட்டும் செயல்படுத்த வேண்டும். உருவச்சிலை வைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.