பொன்னும் பொருளும் அருளும் அனந்தநாராயணர்
பஞ்ச நாராயணத் தலங்களில் திருக்கண்ணமங்கை திவ்விய தேசத்துக்கு அடுத்ததாக ஆவராணி எனப்படும் ஆபரணதாரி, வடக் காலத்தூர், தேவூர், கீழ்வேளூர் ஆகிய தலங்கள் அமைந்திருக்கின்றன.
திருக்கண்ணமங்கையில் லோகநாத பெருமாளாகவும், ஆவராணியில் அனந்தநாராயண னாகவும், வடக்காலத்தூரில் வரத நாராயணனாகவும், தேவூரில் தேவ நாராயணனாகவும், கீழ்வேளூர் என்ற கீவளூரில் யாதவ நாராயண னாகவும் பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார்.
பஞ்ச நாராயணத் தலங்களில் ஆவராணி தலத்தில் மண்ணளந்து பின் விண்ணளந்த விஸ்வரூபியான மகாவிஷ்ணு, ஏழு தலைகளை உடைய ஆதிசேஷன்மீது அனந்த சயனம்கொண்டு, எழிலார்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.
திருவட்டாறு தலத்தில் இருப்பதைப்போலவே இங்கும் பெருமாளை மூன்று நிலைகளில் தான் நம்மால் தரிசிக்க முடியும். சந்நிதிக்கு நேராக தரிசிக்கும்போது பெருமாளின் திருமேனி அழகை மட்டுமே நாம் தரிசிக்க முடியும்.
கருவறைக்கு அருகில் சென்றால் கூட முழுமையாகப் பெருமாளை தரிசிக்க முடியாது. எனவே, முதலில் ஒரு சாளரத்தின் வழியாக பகவானின் திருவடி தரிசனமும், தொடர்ந்து சந்நிதிக்கு எதிரில் இருந்தபடி பெருமாளின் திருமேனி அழகையும் தரிசித்த பின்னரே, மற்றொரு சாளரத்தின் வழியாக பெருமாளின் எழிலார்ந்த திருமுக தரிசனமும் பெற வேண்டும்.
இந்தத் தலத்தில் பெருமாள் தம் திருமேனி முழுவதும் ஆபரணங்களைத் தரித்து, ஆபரண தாரியாக காட்சிதருவதால், இந்தத் தலத்துக்கு ஆபரணதாரி என்ற பெயர் ஏற்பட்டதாகவும், தற்போது ஆவராணி என்று வழங்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
12-ம் நூற்றாண்டில் இரண்டாம் ராஜராஜன் காலத்தில் இந்தத் தலம் ‘திரு ஆபரணதாரி சதுர்வேதி மங்கலம்’ என்று அழைக்கப்பட்டதாகத் தெரியவருவதால், அக்காலத்தில் இந்தத் தலத்தில் நான்கு வேதங்களையும் கற்ற வேத விற்பன்னர்கள் இருந்துள்ளனர் என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது.
திருமேனி முழுவதும் ஆபரணங்களைத் தரித்து ஆபரணதாரியாகக் காட்சி தரும் பெருமாளை சேவிக்க கோயிலுக்குள் செல்கிறோம். மகா மண்டபத்துக்கு முன்பாகவே, கருவறையில் இருக்கும் பகவானை சேவித்தபடி காட்சிதரும் பெரிய திருவடியாம் கருடாழ்வாரை தரிசிக்கலாம்.
அர்த்த மண்டபத்தின் வலப்பக்கம் ஆஞ்சநேயர் சந்நிதியை தரிசித்து வழிபடலாம். மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து கருவறைக்குச் செல்கிறோம்.
கருவறையில் பகவான் பள்ளிகொண்ட வரலாறு பற்றி அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது, மகாவிஷ்ணு இரவெல்லாம் உலக மக்களுக்கு படியளந்து வந்ததாகவும், இந்தத் தலத்துக்கு வந்தபோது பொழுது விடிந்துவிட்டபடியாலும், களைப்பின் காரணமாகவும் ஏழு தலைகளை உடைய ஆதிசேஷன்மீது சயனம் கொள்ளத் திருவுள்ளம் கொண்டார்.
அதன்படி, தான் படியளந்த மரக்காலையே தலைக்கு அணையாக வைத்து அனந்தசயனத்தில் திருக்காட்சி தருகிறார் பெருமாள் என்று தெரிவித்தார்கள்.
ஒரு திருக்கரம் திருமுடியைத் தாங்க, கார்மேக வண்ணனாக திருமுடியில் மணிமகுடம், திருச்செவிகளில் குண்டலங்கள், திருத்தோள்களில் கட்கம், திருமார்பில் ‘நலங்கிளர் ஆரம்’ உத்தரீயம், திருவடிகளில் தண்டை என்று சர்வாபரணதாரியாக எழிலார்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
பெருமாளின் நாபிக் கமலத்தில் இருந்து தோன்றிய பிரம்மா, திருமகள், பூமகள் சமேதராக, திருமுடி அருகில் பிருகு முனிவரும், திருவடிப் பகுதியில் வேத வியாசரும் சேவிக்க, ஆனந்த புன்னகை பூத்தவராகக் காட்சி தரும் பெருமாளின் வடிவழகை தரிசிக்க நம் இரு கண்கள் போதாது என்றுதான் தோன்றுகிறது.
கோயிலின் தெற்குப் பிராகாரத்தில் தனிச் சந்நிதியில் அருள்மிகு அலங்காரவல்லித் தாயார் திருக்காட்சி தருகிறார். ‘மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரிது’ என்பதற்கேற்ப, தாயாரின் திருவடிவம் சிறியதாக இருந்தாலும், வழிபடும் பக்தர்களுக்கு அளவற்ற நன்மைகளை அருள்வதில் சிறந்து விளங்குகிறார்.
கோயிலுக்குள் வடப்புற பிராகாரத்தில் தீர்த்தக் கிணறும், கோயிலுக்கு அருகில் வடகிழக்கில் அனந்தபுஷ்கரிணி தீர்த்தக்குளமும் அமைந்திருக்கிறது. அனந்தபுஷ்கரிணியில் நீராடி, ‘அச்யுதா, அனந்தா, கோவிந்தா’ என்று மூன்று முறை ஜபித்து அனந்தநாராயணப் பெருமாளை சேவித்தால், கேட்கும் வரங்கள் எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
நல்லன எல்லாம் தரும் நாராயணனின் எழிலார்ந்த திருக்கோலம் தரிசித்துத் திரும்பிய நம் மனதுள், ‘பச்சைமாமலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண்’ என்னும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாசுரம் தோன்றியதுடன், இப்படி ஒரு திவ்விய தரிசனம் கிடைக்கப்பெற்றால் இந்த மண்ணுலகமே சொர்க்கம்தான் என்ற எண்ணமும் தோன்றிப் பரவசத்தில் ஆழ்த்தியது.
எங்கிருக்கிறது… எப்படிச் செல்வது?
நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் ஆவராணி அமைந்திருக்கிறது. நாகப்பட்டினத்தில் இருந்து 6-ம் எண்ணுள்ள நகரப் பேருந்து செல்கிறது