சென்னை:  ஆருத்ரா மோசடியில் தலைமறைவாக உள்ள நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான  ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜராக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.

ரூ.2,438 கோடி  ஆருத்ரா மோசடியில் தலைமறைவாக உள்ளவர்களை  இண்டர்போல் உதவியுடன்  பிடிக்க தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த மோசடி யில் தொடர்புடையவர்கள் மற்றும் இதில் லோன் வாங்கிவிட்டு கட்டாமல் டிமிக்கி கொடுத்து வந்த திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்கே.சுரேஷ் உள்பட பலர் துபாய் நாட்டில் பதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் துபாயில் சுமார் ரூ.500 கோடி வரை முடக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், ஆரூத்ரா இயக்குனர்கள் மற்றும் ஆர்கே சுரேஷை,  கைது செய்து  விசாரணை நடத்த தமிழ்நாடு காவல்துறை   தீவிரம் காட்டி வருகிறது. இவர்களை பிடிக்க ஏற்கனவே லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. ரூ.2,438 கோடி  மோசடியில்இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோசடி பணத்தில் வாங்கிய பல கோடி ரூபாய் மதிப்பிலான 127சொத்துகளில் 60 சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.102 கோடி முடக்கப்பட்டுள்ளது; ரூ.6.5 கோடி பணம், 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 இந்த நிலையில்,  தலைமறைவாக உள்ள நடிகர் ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜராக போலீஸ் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கனவே துபாயில் உள்ள ஆரூத்ரா நிறுவன சொத்துகளை முடக்க துபாய் நாட்டு அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அவர்களின் சொத்துக்களை முடக்க கடிதம் அனுப்பியுள்ளது.