டில்லி

டில்லி மாநிலத்தில் ஆறு தொகுதி தங்களுக்கும் ஒரு தொகுதி காங்கிரஸுக்கும் வழங்க உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பல கட்டங்களாகப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

டில்லியில் மொத்தம் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் 6 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாகவும், 1 தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு வழங்க முடிவு செய்துள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. குஜராத்தில் 2 தொகுதிகளுக்கும், கோவாவில் ஒரு தொகுதிக்கும் ஆம் ஆத்மி கட்சி தங்கள் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.

ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர். சந்தீப் பதக் செய்தியாளர்களிடம்,

“ஆம் ஆத்மி சார்பில் தெற்கு கோவா தொகுதியில் வென்சி விகாஸ் போட்டியிடுவார். குஜராத்தின் பருக் தொகுதியில் சைத்தர் வசாவா, பாவ்நகர் தொகுதியில் உமேஷ் பாய் மக்வானா ஆகிய ஆம் ஆத்மி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.

சமீபத்திய தேர்தல்களில் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில், டில்லியில் 6 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட விரும்புகிறது. அதே போல் காங்கிரஸ் கட்சிக்கு அதன் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் ஒரு தொகுதியை வழங்க விரும்புகிறோம்.

டில்லிக்கு எந்த வேட்பாளரையும் இதுவரை நாங்கள் அறிவிக்கவில்லை. தொகுதிப் பங்கீடு தொடர்பாக ‘இந்தியா’ கூட்டணியில் விரைவாகப் பேச்சுவார்த்தை நடக்கவில்லை என்றால், நாங்கள் டெல்லியில் உள்ள 6 இடங்களுக்கான வேட்பாளர்களையும் அறிவிப்போம்.”

என்று கூறினார்.