சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ள ஆம்ஆத்மி அரசு, தான் கொடுத்த தேர்தல் வாக்குறுதிபடி, ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதை உறுதிப்படுத்தி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த திட்டம் ஜூலை 1ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்து உள்ளார். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது.  117 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் 92 தொகுதிகளை ஆம் ஆத்மி கைப்பற்றி தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜகவை ஓட ஓட விரட்டியடித்துள்ளது. இதைத் தொடர்ந்து,  பஞ்சாப் மாநில முதல்வராக பகவந்த் மான் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றது. பின்னர் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், உடனடியாக, மாநிலத்தின் பல்வேறு அரசு துறைகளில்  உள்ள சுமார்  25000 காலி பணியிடங்களை அதிரடியாக நிரப்பி உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என கூறிய நிலையில்,  ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் ஜூலை முதல்  வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.