மைசூர்: காண்டிராக்டர் தற்கொலை காரணமாக எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தால் மந்திரி பதவியை ராஜினாமா செய்த கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா,  இது எனக்கு அக்னி பரீட்சை. இதிலிருந்து நான் கண்டிப்பாக மீண்டு வந்து மீண்டும் அமைச்சராவேன் என்று ஆவேசமாக கூறினார்.

கர்நாடக மாநிலத்தின் பெலகாவி மாவட்டம் இண்டல்கா பகுதியைச் சேர்ந்த காண்டிராக்டரான சந்தோஷ் கே.பட்டீல் கடந்தவரம் ஒரு தனியார் விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது தற்கொலைக்கு அமைச்சர்  ஈஸ்வரப்பாதான் காரணம் என அவர் வீடியோவில் தெரிவித்திருந்தார். இது கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியது. இதைத்தொடர்ந்து,  உடுப்பி டவுன் போலீசார் மந்திரி ஈஸ்வரப்பா, அவரது உதவியாளர்கள் மீது சந்தோசை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையில் ஈஸ்வரப்பாவை கைது செய்ய வேண்டும் என்றும், அவர் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் ஒருபுறம் பிரஷர் கொடுக்க மற்றொருபுரம் காண்டிராக்டர்கள் சங்கத்தினரும் அரசு வேலைகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்து போராட்டத்தில் குதித்தனர். இதை யடுத்து, ஈஸ்வரப்பா  தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, பெங்களூருவுக்கு வந்தவர், முதல்வர் பசவராஜ் பொன்மையை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். முன்னதாக தனது சொந்த தொகுதியான சிவமொக்காவில் இருந்து  புறப்படுவதற்கு முன்னதாக அவர் தனது ஆதரவாளர்கள் மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் முன்பு பேசினார். அப்போது, அவரது ஆதரவாளர்கள், அவரை பதவி விலக வேண்டாம் என கண்ணீர்மல்க வேண்டிக்கொண்டனர். அவர்களிடம் பேசும்போது,  நான் பொறுப்பேற்றதில் என்னைவிட எனது ஆதரவாளர்கள், தொண்டர்கள் மற்றும் குடும்பத்தினர்தான் அதிகளவில் மகிழ்ச்சி அடைந்தனர்/ என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் உண்மை இல்லை. நான் நிரபராதி என்பதை கோர்ட்டில் நிரூபித்து மீண்டும் மந்திரி ஆவேன்.

நான் குற்றமற்றவன் என்பது எனக்கு தெரியும். இருப்பினும் வழக்கின் விசாரணை நடைபெறும் வேளையில் நான் மந்திரி பதவியில் இருந்தால் அது விசாரணையை கெடுக்கும் வகையில் அமைந்துவிடும் என்று பலரும் நினைப்பார்கள். அதனால் நான் எனது மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறேன். இது எனக்கு அக்னி பரீட்சை ஆகும். இதிலிருந்து நான் கண்டிப்பாக மீண்டு வருவேன். அதில் எனக்கு திடமான நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.