டில்லி

விரைவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் 5 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது.

இந்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா கூட்டணி’ என்ற பெயரில் மாபெரும் கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதில் காங்கிரஸும், ஆம் ஆத்மி கட்சியும் அங்கம் வகிக்கின்றன.

நேற்று முன்தினம் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி குறித்து இவ்விரு கட்சிகளும்  ஆலோசனை நடத்தின.  இந்த ஆலோசனையில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் 5 மாநிலங்களில் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளன.

ஆம் ஆத்மி கட்சியின் டில்லி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் இது குறித்து,

“காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. டில்லி, பஞ்சாப், அரியானா, கோவா, குஜராத் ஆகிய 5 மாநிலங்களில் கூட்டணியில் இணைந்து போட்டியிடும் நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். இது வரை, நேர்மறையான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.

குறிப்பாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ள டில்லி பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ் பிரிவுகள் ஆம் ஆத்மியுடன் இணைந்து போட்டியிடும்.  தொகுதிப் பங்கீடு குறித்து அடுத்த கூட்டத்தில், பேச்சுவார்த்தை நடத்தப்படும்”

என்று தெரிவித்துள்ளார்.