சென்னை: மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான அகில இந்திய நுழைவுத்தேர்வான நீட் தேர்வில் அடுத்தடுத்து ஆள் மாறாட்டக் குற்றங்கள் கண்டுபிடிக்கப்படுவதால், வரும் 2020ம் ஆண்டு தேர்வுக்கு, மாணாக்கர்களின் ஆதார் விவரங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதியை மத்திய அரசிடம் கேட்டுள்ளது தேசிய டெஸ்டிங் ஏஜென்சி கேட்டுள்ளது.

இத்தகவலை அந்த ஏஜென்சியின் இயக்குநர் வினித் ஜோஷி தெரிவித்தார்.

ஏஜென்சியின் கோரிக்கைக்கு மத்திய அரசு சம்மதம் தெரிவித்தால், மாணாக்கர்களின் கைரேகை மற்றும் கருவிழிப் படலம் ஆகியவை, தேர்வு செயல்முறையின் பல கட்டங்களில் எடுத்துக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பம், தேர்வு, கவுன்சிலிங் மற்றும் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளின்போது மேற்கண்ட ஆதாரங்கள் பயன்படுத்தப்பட்டு, அவை, தேசியப் பதிவகத்தில் உள்ள விவரங்களுடன் ஒப்பிடப்படும்.

தங்களின் கைரேகை மற்றும் கருவிழி ஸ்கேன் விவரங்களை சமர்ப்பிக்குமாறு மாணாக்கர் கேட்கப்படுவர். இவை பின்னர் சரிபார்க்கப்படும்.

தற்போதைய நிலையில், தேர்வு தொடங்குவதற்கு முன்னரும், தேர்வு முடிந்த பின்பும் மாணாக்கர்களின் கைரேகை எடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.