ஸ்ரீநகர்: காஷ்மீரில் மோடி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால், ஆப்பிள் உற்பத்தியாளர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

ஆப்பிள் விவசாயிகளைப் பாதுகாக்க கொண்டுவரப்பட்டதாக சொல்லப்படும் சந்தை தலையீடு திட்டத்தால் குறிப்பிட்ட பலன் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. அந்த திட்டத்தால் ஆப்பிள்களை வாங்க அதிகளவில் யாரும் முன்வரவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரங்களிலிருந்து பழுத்து கீ‍ழே விழும் ஆப்பிள்களை துண்டுகளாக நறுக்கி வெயிலில் உலத்தும் வேலையில், ஆப்பிள் விவசாயத்தை நம்பியிருக்கும் பல காஷ்மீர் குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த உலர்ந்த ஆப்பிள்கள் குளிர் காலங்களில் கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படும் என்று கூறப்படுகிறது.

ஆப்பிள்களைப் பொறுத்தவரை அவற்றை மரங்களிலேயே பறித்துவிட வேண்டும். கீழே பழுத்து விழுந்துவிட்டால் விழுந்தப் பழங்களுக்கு மதிப்பு குறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி விழுந்தவை, உண்மை விலையில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே விலை போகும் என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரில் தற்போது நிச்சயமற்ற சூழல் நிலவுவதாலும், அ‍ங்கே அடிப்படை மனித உரிமைகள் தொடர்ந்து நசுக்கப்பட்டு வருவதாலும், ஆப்பிள் விவசாயிகளின் நிலை பரிதாபத்திற்குரியதாக மாறியுள்ளது.