சென்னை: அரசு நல திட்டங்களில் ஆதார் எண்ணை இணைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கான காலஅவகாசம் டிசம்பர் 31ந்தேதி வரை மட்டுமே என்று உத்தரவு பிறப்பித்து உள்ளது.
நாட்டில் அனைத்து பணபரிவர்த்தனைகளுக்கும், பான், ஆதார் அட்டை விவரங்கள் கேட்கப்படுகின்றன. ஆதார் தற்போது பல சேவைகளுக்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் ரயில்களில் டிக்கெட்டுகளை பதிவு செய்வது துவங்கி, வங்கி சேவைகள் வரை அனைத்தையும் பெற்றுக்கொள்வதற்கு இந்த ஆதார் அட்டைகள் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அதே போல சமீப காலங்களாக அரசு நடத்தும் போட்டித் தேர்வுகள், கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகள் அனைத்திலும் இந்த ஆதார் அட்டைகள் கேட்கப்படுகிறது. பான் எண்ணையும், ஆதார் அட்டை எண்ணையும் இணைக்கும் கடைசி நாள் வரும் 30ம் தேதி என்று வருமானவரித்துறை அறிவித்துள்ளது. மக்களின் அனைத்து தேவைகளுக்கும் இந்த ஆதார் அட்டைகள் தற்போது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது.
இந்த நிலையில், தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் எண் கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசு தரும் நலத்திட்ட உதவிகளை பெற்றுக்கொள்ள அரசு நல திட்டங்கள் சம்பந்தப்பட்ட அனைத்திலும் ஆதார் எண்ணை கட்டாயம் இணைத்திருக்க வேண்டும். இதற்கான காலக்கெடு டிசம்பர் 31 ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு தரும் நலத்திட்ட உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு பொது மக்கள் தங்கள் ஆதார் எண்களை இணைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அரசின் நலத் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் துவங்கி இணையதளங்கள் வரை உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் . நலத்திட்ட உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு ஆதார் எண்களை கட்டாயமாக இணைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சேவைகளை நிறைவேற்றிக்கொள்ள டிசம்பர் 31 ஆம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் பொது மக்கள் அனைவரும் ஆதார் எண் இணைப்பு செயல்பாடுகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.