சென்னை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு பின்னர் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் திறக்கப்பட்டு உயர்நிலை, மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதில், பல தனியார் பள்ளிகள், அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறி, அதிக நேரம் வகுப்புகளை நடத்தி வருகின்றன. இதற்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், அரசுக்கு புகார்களும் அனுப்பி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஆகஸ்டு 1ந்தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடிவகுப்புகள் நடைபெற்று வருகிறது. பள்ளிகளில் திறக்கப்பட்டாலும் வருகைப் பதிவு எனப்படும் அட்டண்டென்ஸ் கட்டாயம் அல்ல என்று கூறப்பட்டுள்ளது. எனினும், முகக்கவசம் அணிவது சமூக இடைவெளியை பின்பற்றுவது ஆகியவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், ஒரு மேஜையில் 2 மாணவர்கள் அமர வேண்டும் என்றும், வகுப்பறையை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சானிடைசர்ஸ் வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

இதுமட்டுமின்றி, வாரத்திற்கு 6 நாட்கள் வீதம், ஒரு நாளைக்கு 5 பாடப்பிரிவுகளாக பிரித்து வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை 6 மணி நேரம் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்,வழக்கமான வகுப்புகளுக்கு ஐந்து மணிநேரமும் கூடுதல் வகுப்புக்கு ஒரு மணி நேரமும் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும்,   உடற்கல்வி வகுப்புகள் கிடையாது, என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். 

ஆனால், பல தனியார் பள்ளிகள்,அரசின் உத்தரவை மீறி, சுழற்றி முறையின்றி அனைத்து மாணாக்கர்களையும் பள்ளி வரவழைத்துள்ளது மட்டுமின்றி  9 மணி நேரம் வகுப்புகளை நடத்தி வருகின்றன. இது பெற்றோர்களுக்கு மனஅழுத்தத்தை கொடுத்துள்ளது. கொரோனா தொற்று அச்சுறுத்தல் உள்ள நிலையில், தனியார் பள்ளிகளின் அத்துமீறும் செயல்களால் தங்களது குழந்தைகள் பாதிக்கப்படுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

சென்னை மந்தைவெளியில் உள்ள ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்க பள்ளி நிர்வாகம் தரப்பில் அனுப்பட்டுள்ள குறுஞ்செய்தியில், பள்ளி 9 மணி நேரம் செயல்படும் என்று தெரிவித்து உள்ளது. அதற்கான அட்டவனையையும் அறிவித்து உள்ளது. இது பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆறு மணிநேர வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்ற அரசின் உத்தரவை மீறி (SOP) மீறி, அப்பள்ளி  மாணவர்களுக்கு ஒரு புதிய அட்டவணையை அனுப்பி உள்ளது.

அதன்படி, ஒவ்வொரு மாணவரும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து ஒரு ‘புதுப்பிப்பு’ (Update) செய்தியை அனுப்ப வேண்டும். இல்லையென்றால், 5 மணிக்குள் அவர்களுக்கு நினைவூட்டல் (reminder) அனுப்பப்படும்.

முந்தைய இரவில் மாணவர்கள் படித்த பாடங்கள், எத்தனை மணி நேரம் படித்தனர்,  மற்றும் இரவு 10.30 மணிக்கு ‘நிர்ணயிக்கப்பட்ட’ படுக்கை நேரம் உள்பட பல விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இப்பளியின் தகவலின்படி, ஒரு மாணவன் நாள் ஒன்றுக்கு குறைந்தது  ஐந்தரை மணிநேரம் மட்டுமே தூங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

ரீ சைதன்யா டெக்னோ பள்ளி இந்த செயல் பெற்றோர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சாதாரணமாக ஒருவர் குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும் என்ற நிலையில், மாணாக்கர்களின் தூக்கத்தை  குறைக்கும் வகையில் செயல்படும் பள்ளி நிர்வாகத்தின்மீது பெற்றோர்கள் கடுமையான குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

‘பொதுவாகவே நீண்ட நேரம் முகக்கவசம் அணிவது சாத்தியாமில்லாத நிலையில், 9 மணி நேரம் வகுப்பறையில் எப்படி இருக்க முடியும் என பல மாணாக்கர்கள், பெற்றோர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால், பல  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பதிலும் பள்ளிக்கு அனுப்புவதிலும் சிக்கித் தவிக்கிறார்கள்.

இதுகுறித்து கூறிய அப்பள்ளியின்  பாடத்திட்டத்தின் அதிகாரி, மாணாக்கர்களின்  பாடத்திட்டத்தை உள்ளடக்க வேலை நேரத்தை அதிகரித்திருப்பதாக தெரிவித்து உள்ளார். “பள்ளிகள் நீண்ட நேரம் மூடப்பட்டிருப்பதால், கூடுதல் மணிநேரம் தேவைப்படுகிறது. மேலும், நாங்கள் மாலை 3.30 மணி வரை செயல்படுகிறோம். கடைசி மணிநேரம் கூடுதல் வகுப்புக்கு,” என்று தெரிவித்து உள்ளார்.

இந்த விஷயத்தில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கூறி வருகின்றனர்.