டில்லி:

தபால் நிலையங்களில் பொது சேம நல நிதி, தேசிய சேமிப்பு பத்திரம், கிஸான் விகாஸ் பத்திரம் ஆகியவற்றில் டெபாசிட் செய்ய ஆதார் கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே டெபாசிட் செய்துள்ளவர்கள் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தபால் நிலையங்களில் அனைத்து வகையான டெபாசிட் கணக்குகள் தொடங்க ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு பிறப்பித்துள்ள தனி அரசிதழ் அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. கறுப்பு பணம் ஒழிப்பு மற்றும் பினாமி பரிமாற்றங்களை கட்டுப்படுத்த வங்கி கணக்குகள், மொபைல் போன் உள்ளிட்ட பல அம்சங்கள், சேவைகளுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

அரசின் மானியங்கள், சலுகைகள், திட்டங்களை பெற ஆதார் பதிவு செய்ய வரும் டிசம்பர் 31ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இலவச காஸ் இணைப்பு, மண்ணெண்ணை, உர மானியம், பொது விநியோக திட்டம், 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்டவற்றுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடுவும் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து கடந்த மாதம் 26ம் தேதி வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு ஆதார் எண் கட்டாயம் என்பது தொழிலாளர்கள் பென்சன் திட்டம், கல்வி உதவித் தொகை, வீட்டு மானியம், எஸ்சி/எஸ்டி பயிற்சி, மாற்றுத்திறனாளி மானியம், ஆம் ஆத்மி பீம யோஜனா ஆகிய திட்டங்களு க்கம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தேசிய அப்ரண்டீஸ் பயிற்சி, திறன் மேம்பாட்டு திட்டங்கள், பயிர் காப்பீடு, பல்வேறு கல்வி திட்டங்கள், மதிய உணவு, அடல் பென்சன் யோஜனா ஆகிய திட்டங்களுக்கும் பொருந்தும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கால நீட்டிப்பு ஆதார் எண் பெறாதவர்களுக்கும், ஆதார் எண்ணை பதிவு செய்யாமல் இருப்பவர்களு க்கு மட்டுமே பொருந்தும். இந்த இடைப்பட்ட காலத்தில் திட்டங்களின் சேவை மறுக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.