டில்லி
குர்கானில் ஆதார் இல்லாமல் மருத்தவமனையில் ஒரு பெண்ணை அனுமதிக்காத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் கூறி உள்ளது.
டில்லிக்கு அருகில் உள்ள குர்கானில் வசிப்பவர் பப்லு. இவர் மனைவியை முன்னியை குழந்தை பெறுவதற்காக குர்கான் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு முன்னியின் அசல் ஆதார் கார்ட் (ஒரிஜினல்) தேவை எனக் கூறி உள்ளனர். பப்லுவிடம் முன்னியின் ஆதார் எண் இருந்துள்ளது. அதை வைத்து சிகிச்சையை ஆரம்பிக்குமாறு அவர் கெஞ்சி உள்ளார். ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.
பப்லு உடனடியாக வீட்டுக்கு சென்று அசல் கார்டை எடுத்து வர கிளம்பி உள்ளார். அவர் வருவதற்குள் முன்னி மருத்துவமனையை விட்டு வெளியேற்றப் பட்டுள்ளார். கடுமையான வலியில் உள்ள அவருக்கு சாலையில் பிரசவம் நிகழ்ந்துள்ளது. அங்கிருந்த பெண்கள் தங்கள் துப்பட்டாவைக் கொண்டு மறைப்பு அமைத்து பிரசவம் பார்த்துள்ளனர்.
அதன் பிறகு முன்னியும் அவருக்கு பிறந்த பெண் குழந்தையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விவரம் பரவவே அந்த மருத்துவமனையில் தலைமை மருத்துவர் விசாரணை நடத்தி உள்ளார். விசாரணையில் ஊழியர்கள் மீது தவறுள்ளாதாக தெரிய வரவே அனுமதிக்க மறுத்த மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து தேசிய சுகாதார ஆணையத்தின் செயலாளர் மனோஜ் ஜலானி, “இது விரும்பத்தகாத ஒரு நிகழ்வாகும். ஆனால் உண்மையில் நடந்த ஒரு நிகழ்வாகும். அவசர மற்றும் முக்கிய மருத்துவ சேவைகளுக்கு ஆதார் அவசியமில்லை. அந்தப் பெண்ணிடம் இவ்வாறு நடந்துக் கொண்ட ஊழியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என நாங்கள் பரிந்துரை அளித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.