டெல்லி:

மூத்த குடிமக்களுக்கு மத்தியஅரசு வழங்கி வரும் ‘பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா’  என்ற  ஓய்வூதிய திட்டத்தில் உதவித்தொகை பெற ஆதார் எண் கட்டாயம் என்று மத்தியஅரசு அறிவித்து உள்ளது.

மோடி தலைமையிலான பாஜக அரசு  கடந்த 2017-2018 மற்றும் 2018-2019 மத்திய பட்ஜெட்டுகளில் ‘பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா என்ற திட்டத்தில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு,எல்.ஐ.சி. மூலம்  ஆண்டுக்கு 8 சதவீத உத்தரவாத தொகை வழங்கி வருகிறது.

‘பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா’  திட்டம் எப்படி?

பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்கள் கண்டிப்பாக 60 வயதினை பூர்த்திச் செய்து இருக்க வேண்டும்.

இவர்கள்  ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் பென்ஷன் பெற ரூ. 1,50,000 ரூபாய் டெபாசிட் செய்திருக்க வேண்டும். அதுபோல,  5000 ரூபாய் ஓய்வூதியம் பெற 7,50,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.

காலாண்டு பென்ஷன் திட்டத்தின்படி,  ஒவ்வொரு காலாண்டும் 3,000 ரூபாய் பென்ஷன் பெற 1,49,068 ரூபாயும், 15,000 ரூபாய் பென்ஷன் பெற 7,45,342 ரூபாயும் முதலீடு செய்ய வேண்டும்.

அரையாண்டு பென்ஷன் திட்டப்படி  ஒவ்வொரு அரையாண்டும் 6,000 ரூபாய் பென்ஷன் பெற 1,47,601 ரூபாயும், 30,000 பெஷன் பெற 7,38,007 ரூபாயும் முதலீடு செய்ய வேண்டும்.

ஓர் ஆண்டுப் பென்ஷன் திட்டப்படி,  ஒவ்வொரு ஆண்டும் 12,000 ரூபாய் பென்ஷன் பெற 1,44,578 ரூபாயும், 60,000 ரூபாய் பெடனசன  பெற 7,22,892 ரூபாயும் முதலீடு செய்ய வேண்டும்.

எல்ஐசி-காப்பீடு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும்  இந்தப் பிராதான் மந்திரி வய வந்தன யோஜனா திட்டத்தின் கீழ் ஓய்வூதியதார்களைச் சார்ந்து உள்ள மனைவி அல்லது கணவன் அல்லது பிறருக்கு இந்த ஓய்வூதியத்தின் கீழ் தவனை முடிய 10 ஆண்டுகள் இருக்கும் போது இறக்க நேர்ந்தால் தொடர்ந்து ஓய்வூதிய பெற அனுமதி உண்டு.

முதலீடு செய்யும் ஒவ்வொரு 1,000 ரூபாய்க்கும் மாத ஓய்வூதியதார்களுக்கு 80 ரூபாயும், காலாண்டு ஓய்வுதியதார்களுக்கு 80.50 ரூபாயும், அரையாண்டு ஓய்வுதியதார்களுக்கு 81.30 ரூபாயும், ஆண்டு ஓய்வூதியதார்களுக்கு 83 ரூபாயும் வழங்கப்படும்.

தற்போது,  இந்தத் திட்டத்தின்படி உதவித்தொகை பெற ஆதார் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

மூத்த குடிமக்கள் ஓய்வூதிய திட்டத்தில் பலனடைய தகுதி உடையவர்கள், ஆதார் வைத்திருப்பதற்கான ஆதாரம் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது ஆதாருக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆதார் எண் இல்லாதவர்கள் மற்றும் ஆதாருக்கு இன்னும் பதிவு செய்யாதவர்கள், இந்த திட்டத்தில் சேருவதற்கு முன்பு ஆதார் சேர்க்கைக்கு பதிவு செய்ய வேண்டும்.

தெளிவற்ற ‘பயோ மெட்ரிக்’ விவரங்களால், ஆதார் அடையாளத்தை உறுதி செய்ய முடியாவிட்டால், அத்தகைய நபர்களுக்கு ஆதார் எண் கிடைக்க மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிச்சேவைகள் பிரிவு உதவும்.

ஒருமுறை பெறப்படும் ரகசிய குறியீட்டு எண் (ஓ.டி.பி.) பெற சாத்தியம் இல்லாவிட்டால், ஆதார் கடிதம் மூலம் பலன்கள் அளிக்கப்படும். ஆதார் கடிதத்தில் அச்சிடப்பட்டுள்ள கியூ.ஆர். கோட் மூலம் நம்பகத்தன்மை சரிபார்க்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.