மும்பை

காராஷ்டிர முதல்வரைக் குறித்து தவறான கருத்து வெளியிட்டவரைத் தாக்கிய சிவசேனா தொண்டர்களுக்கு ஆதித்ய தாக்கரே அறிவுரை அளித்துள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடெங்கும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.   டில்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது டில்லி காவல்துறையினர் அத்து மீறி நுழைந்து தாக்கியதாக தகவல்கள்  வெளியாகியது.   இது நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை உண்டாக்கியது.

காவல்துறையினர் நடத்திய தாக்குதலுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.   மகாராஷ்டிர முதல்வரும் சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே  இந்த சம்பவத்தைச் சுதந்திரப் போராட்டத்தின் போது நடந்த ஜாலியன்வாலா பாக் தாக்குதலுடன் ஒப்பிட்டு இணையதளத்தில் கருத்து தெரிவித்தார்.

இதற்கு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த ஹிராமனி திவாரி என்பவர் உத்தவ் தாக்கரேவை தனிப்பட்ட முறையில் சாடி கருத்து வெளியிட்டிருந்தார்.   இதனால் ஆத்திரமடைந்த சிவசேனா தொண்டர்கள் கடந்த 20 ஆம் தேதி அன்று திவாரியைச் சரமாரியாகத் தாக்கி காயப்படுத்தி உள்ளனர். இதையொட்டி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வனின் புகாரின் அடிப்படையில் அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும் ஒர்லி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான ஆதித்ய தாக்கரே, “சிவசேனா தொண்டர்கள் முதல்வரின் அமைதியான வழியைப் பின்பற்ற வேண்டும்.  அவரைப் பற்றி யாராவது தவறான கருத்துக்களைச் சொன்னால் அதற்காக நாம் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு தாக்குதல் நடத்தக் கூடாது.   அவர்களுக்கு நமது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே பதில் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.