சென்னை: பள்ளிகளிலேயே ஆதாா் பதிவு, திருத்தம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு புதிய பதிவுகள், ஆதாா் எண் புதுப்பித்தல் தொடா்பான பணிகளை மேற்கொள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் அந்தப் பள்ளியிலேயே ஆதாா் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள், ஆதாா் எண் புதுப்பித்தல் தொடா்பான பணிகளை மேற்கொள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலா் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில், அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கான ஆதாா் மையங்களை உருவாக்க வேண்டும். மாணவா்களுக்கான உதவி மற்றும் ஊக்கத் தொகை அனைத்தும் பயனாளா்களுக்குக் குறித்த நேரத்தில் முறையாகச் சென்று சேருவதை உறுதி செய்யும் வகையில் நேரடிப் பயனாளா் பரிமாற்றம் மூலம் பயனாளா்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாகச் செலுத்தும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வங்கிக் கணக்கு கட்டாயம் தேவைப்படுகிறது. அதற்காக மாணவா்களுக்குப் புதிதாக ஒரு வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு ஆதாா் எண் அவசியமாகிறது. மேலும், ஆண்டுதோறும் 17 லட்சம் மாணவருக்குக் கட்டாயப் புதுப்பித்தல் பணி மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இந்தப் பணிகளை மேற்கொள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநா் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடம் பதிவாளராகப் பதிவு பெற்றுள்ளாா். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்ககம் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடமிருந்து 770 ஆதாா் பதிவுக் கருவிகளைக் கொள்முதல் செய்து தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.
பள்ளிகளில் ஆதாா் பதிவை மாணவா்களின் வயதின் அடிப்படையில் 4 நிலைகளில் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் குழந்தை பதிவு சோ்க்கை கொள்கையின்படி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயோமெட்ரிக் பண்புக் கூறுகள் அதாவது, கைரேகை மற்றும் கருவிழி படங்கள் பிடிக்கப்படுவதில்லை. பெற்றோரின் ஆதாா் விவரங்கள் மற்றும் கைரேகை அங்கீகாரத்துடன் குழந்தையின் முகம் மட்டும் பதிவு செய்யப்படுகிறது.
இவ்வகை புதிய பதிவுகளைத் தற்போது பள்ளிகளிலேயே மேற்கொள்ளலாம். இதற்கான வழிமுறைகள் தனியாக வெளியிடப்படும். குழந்தைகள் 15 வயதை அடைந்த பிறகு மீண்டும் நிலையான பயோமெட்ரிக் தகவல்களை முகம், கைரேகைகள் மற்றும் கருவிழிகள் கட்டாயம் புதுப்பிக்க வேண்டும்.
இவ்வகை புதுப்பித்தல் பணிகளையும் தற்போது பள்ளிகளிலேயே மேற்கொள்ளலாம். ‘பயிலும் பள்ளியிலேயே ஆதாா் பதிவு’ என்ற சிறப்பு முன்னெடுப்பின் கீழ் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் அந்தப் பள்ளியிலேயே ஆதாா் எண் பெறுவதற்குப் புதிய பதிவுகள் மற்றும் ஆதாா் எண் புதுப்பித்தல் செய்ய உத்தரவிடப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.