டெல்லி:

மத்திய அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத் திட்டங்களுக்கு ஆதார் எண் அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சமீப காலமாக மத்திய அரசு தான் வழங்கும் பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளுக்கு பயனாளிகள் ஆதார் எண் பெற்றிருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி வருகிறது. தற்போது செல்போன் சிம் கார்டு வாங்குவதற்கு, ஓட்டுநர் உரிமம் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஆகிய எல்லாவற்றுக்கும் ஆதார் எண் அவசியமாகி வருகிறது.

அதேபோல் 84 அரசு திட்டங்களுக்கு ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது. நாட்டின் முக்கிய திட்டமான பொதுவிநியோக திட்டத்திற்கு ஆதார் இணைக்கும் பணி ஜரூராக நடந்து வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளுக்கு பயனாளிகள் ஆதார் எண் பெற்றிருக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மூத்த வக்கீல் ஷியாம் திவான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், டி.எஸ்.சந்திரசூட் மற்றும் எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘மத்திய அரசு செயல்படுத்தும் பல்வேறு நல திட்டங்களுக்கு ஆதார் எண் அவசியமில்லை’ என்று கருத்து தெரிவித்தனர்.

அதே சமயம் வங்கி கணக்கு துவங்குவது உள்ளிட்ட திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்பதை தடை செய்ய முடியாது. ஆதார் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கு 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அமைப்பது தற்போதைக்கு சாத்தியமில்லை என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது.

பள்ளி சத்துணவு, ஓட்டுனர் உரிமம் பெற, வாகன பதிவு உள்ளிட்டவற்றிற்கு ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயம் ஆக்கி வரும் நிலையில் உச்சநீதிமன்றம் இந்த அறிவுறுத்தலை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.